Published : 03 Jul 2014 10:00 AM
Last Updated : 03 Jul 2014 10:00 AM

வறுமைக் கோட்டுக்கு வரையறை கிடையாது: ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து

நிதிச் சேவையை உள்ளடக்கிய வங்கிச் சேவைக்கு வறுமைக் கோடு என்ற வரையறை பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

வறுமைக்கோடு எது என்பதை அளவிடுவதற்கான வரையறை நிதிச் சேவைக்குப் பொருந்தாது. ஏனெனில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு நிதிச்சேவை கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மை என்று அவர் கூறினார்.

வறுமைக்கோடு என்பதற்கு வரையறுக்கப்பட்ட உறுதியான விளக்கம் எதையும் ரிசர்வ் வங்கி கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தியாவில் நிதிச் சேவைக்கு மிகுந்த தேவை உள்ளது. எனவே அதை விரிவுபடுத்த வேண்டுமே தவிர, அதில் வகைப்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார். நிதிச் சேவை கிடைக்கிறது அல்லது கிடைக்கவில்லை என்ற இரண்டு விஷயங்கள்தான் உள்ளன என்றார் ராஜன்.

ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் அனைவருக்குமான நிதிச் சேவைக்கான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியாக நெதர்லாந்து ராணி மாக்ஸிமா ரகுராம் ராஜனை சந்தித்தார்.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியன என்று மாக்ஸிமா கூறினார். பிரீபெய்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் வெகுவாக புகழ்ந்தார். குறைந்தபட்ச ஊதியம் பெறும் மக்களும் பயனடையும் வகையி்ல் புதிய உத்திகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியது:

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அவ்விதம் உருவாக்கினாலே அது தானாக விரிவடையும். இதற்குரிய சூழலை உருவாக்குவதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அனைவருக்குமான நிதிச் சேவையை அளிக்க வேண்டும் என்ற இலக்கில் மக்களை தேர்வு செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் யாரெல்லாம் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த சேவை கிடைக்கும் என்றார்.

நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு நிதிச் சேவை கிடைக்கவில்லை என சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எவ்வளவு பேருக்கு நிதிச் சேவை கிடைத்துள்ளது என்ற துல்லியமான விவரத்தை அளிக்கும் பணியில் ஆர்பிஐ இறங்கியுள்ளது.

வறுமைக்கோட்டை அளவிடும் முறை குறித்து சுரேஷ் டெண்டுல்கர் அளித்த பரிந்துரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து தனது அறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் சி ரங்கராஜன் அளித்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியானால் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் குறித்த புள்ளி விவரம் தெளிவாகும்.

2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டக் குழு அளித்த அறிக்கையில் நகர்ப்பகுதிகளில் தினசரி ஊதியம் ரூ. 32-ம், கிராமப் பகுதிகளில் தினசரி ஊதியம் ரூ. 26-ம் பெறுபவர்கள் ஏழைகளாகக் கருதப்படமாட்டார்கள் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சுரேஷ் டெண்டுல்கர் வகுத்தளித்த முறையின்படி நாட்டிலுள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை 2004-05-ம் ஆண்டில் 37.2 சதவீதமாக இருந்தது என்றும், அது 2011-12-ம் ஆண்டில் 21.9 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தது.

கிராமப்பகுதிகளில் மாத ஊதியம் ரூ. 816, நகரங்களில் மாத ஊதியம் ரூ. 1,000 சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகக் கருதப்படுவர் என டெண்டுல்கர் முறையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x