

சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி முறையே 4,894 மெகாவாட்டாகவும், 9,857 மெகாவாட்டாகவும் உள்ளது.
மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது, இயற்கையாக கிடைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கொண்டுள்ளது. இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி என்பது இயற்கை மனிதர்களுக்கு அளித்த வரமாகவே கருதப்படுகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதனால் ஆண்டுதோறும் புதிய முதலீடுகள் இத்துறையில் அதிகரித்து நிலையான வளர்ச்சியை தக்கவைத்துள்ளன. தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை கற்றாலை மின் உற்பத்திக்கான பருவ காலமாக கருதப்படுகிறது. நடப்பாண்டு மார்ச் 15-ல் பருவ காலம் தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளாகவே பருவகாலம் முன்னரே தொடங்கி பருவ காலம் முடிந்த பின்பும் சில மாதங்கள் வரை நீடித்து காணப்படுகிறது. காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என மின்உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆடி மாத்தில் காற்று அதிகம் வீசும் என்ற காரணத்தால் அந்த மாதம் காற்றாலை மின்சார உற்பத்தி துறையில் உச்ச பட்ச பருவ காலமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் பெரும்பாலான நாட்கள் தினமும் 100 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 1 முதல் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு மேல் தினமும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 100 மில்லியன் யூனிட்டை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
காற்றாலை போன்றே சூரியஒளி ஆற்றல் உற்பத்தியையும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சூரியஒளி மூலம் பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைத்து, இரவு நேரங்களில் பயன்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
ஆண்டுமுழுவதும் சூரியஒளி ஆற்றல் உற்பத்தி இருக்கிறது. சில நேரங்களில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் சிறப்பான முறையில் தினமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே மின்சாரத்தை சேமிக்கும் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த தமிழக அரசு நிதியுதவி செய்தால் புதிய முதலீடுகள் அதிகரிக்கவும், ஏற்கெனவே இத்தொழிலில் உள்ளவர்கள் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை மேலும் சிறந்த வளர்ச்சி பெறும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.