

கணக்கில் வராத பழைய நோட்டுகளை மற்றவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்பவர்களுக்கு தற்போது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் படி அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் முறைகேடு கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் வரித்துறை எச்சரித்துள்ளது.
வருமான வரித்துறை மேற் கொண்ட 80 ஆய்வுகளில் கணக் கில் காட்டப்படாத வருமானம் ரூ.200 கோடி உள்ளது என கண்டி பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 30 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டோம். நவ. 8 வரை பல்வேறு மாநிலங்களில் சோதனையிட்டத்தில் ரூ.50 கோடி பிடிபட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததற்கு பின்பு யாருடைய வங்கி கணக்கில் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. நாடு முழுவதும் சந்தேகத்திற்கு உரிய வங்கி கணக்கை கொண்டவர்களை கண்டுபிடிக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்துக்கு உரியவர் களின் முறைகேடு கண்டறியப் பட்டால் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் படி வழக்குத் தொடரப்படும். தற்போது பினாமி பரிவர்த்தனைச் சட்டம் திருத்தப் பட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
கணக்கில் காட்டப்படாத பணத்தை மற்றவர்களுடைய கணக்கில் டெபாசிட் செய்தவரை யும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்வதற்கு அனுமதித்த வருக்கும் எதிராக வருமான வரித் துறை வழக்குத் தொடர இந்த புதிய பினாமி சட்டம் வழிவகை செய்கிறது.
500 மற்றும் 1,000 ரூபாய் பழைய நோட்டுகளை மற்றவர்களின் வங்கி கணக்கு மூலம் கறுப்புப் பணத்தை மாற்றுபவர்களையும் பரிவர்த்தனைகளையும் மிகத் தீவிரமாக கண்காணிக்கு மாறு வருமான வரித்துறையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ஏற்கெனவே இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பினாமி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் அதிகமாக பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நிதி புலனாய்வு பிரிவு அல்லது வங்கியிலிருந்து சந்தேகத்திற்கு உரியவர்கள் பற்றி தரும் அறிக்கையில் ரூ.2.5 லட்சத்துக் கும் குறைவாக பணம் டெபாசிட் செய்தவர்கள் பெயர் இடம்பெற் றால் அவர்களும் விசாரிக்கப் படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மற்றவர்களின் வங்கிக் கணக்கில் சிலர் டெபாசிட் செய்துவிடுகிறார்கள். அதன் பிறகு அந்த வங்கி கணக்கை வைத்திருக்கும் நபர்களிடமிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இது போன்று மற்றவர்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி பணத்தை மாற்றுவது பினாமி பரிவர்த்தனையின் கீழ் வருவதாக புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.