Last Updated : 17 Nov, 2016 09:12 AM

 

Published : 17 Nov 2016 09:12 AM
Last Updated : 17 Nov 2016 09:12 AM

தங்க இறக்குமதிக்கு தடையா?- பீதியில் வியாபாரிகள்

பொதுவாக தங்க வியாபாரிகள் மொத்தமாகவும் குறுகிய காலத் திற்கும் தங்கத்தை இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய பிரதமர் மோடி தடை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தங்கநகை வர்த்தகர்கள் பீதியில் உள்ளனர்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது சென்று சமீபத்தில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்க நகை வாங்குவதில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுவாக பெரும்பாலான தங்கம் கறுப்புப் பணம் மூலமாக வாங்கப்படுகிறது என்கிற தகவல்கள் உள்ளன. இதனால் இதன் கணக்கு விவரங்கள் வெளிவருவதில்லை.

தற்போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. கணக்கில் வராத சொத்துகள் மீது அவருடைய அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அரசின் அடுத்த செயல்பாடு என்ன என்பது பற்றி நிச்சயமற்ற சூழல் உள்ளது. சட்டப்படி தொழில் புரிபவர்கள் துணிச்சலான முயற்சிகளை விரும்புவதில்லை என்பதால், அவர்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்க தயாராக இல்லை. நிச்சயமற்ற சூழ்நிலை சரியாகும் வரை மந்தமான நிலை தொடரும் என்று எம்என்சி புல்லியன் இயக்குநர் தாமன் பிரகாஷ் ரத்தோட் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டு தேவைகளுக்காக தங்கம் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்கலாம் என்று தங்கநகை வர்த்தகர்கள் மத்தியில் செய்திகள் பரவிவருவதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த கருத்தை அனைத்து இந்திய வைரம் மற்றும் தங்க நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பு மறுத்துள்ளது. ஆனால் திருமண காலம் என்பதற்காக சில வியாபாரிகள் கூடுதலாக தங்கத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர் என்று இந்திய புல்லியன் மற்றும் ஜுவல்லரி கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். நிதி அமைச்சகமும் இது பற்றி கருத்து கூறவில்லை. தங்கத்தை பற்றி கொள்கைகளை வகுத்து வரும் மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், இறக்குமதிக்கு தடை விதிக்க எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் முறையற்ற வழியில் தங்கம் விற்பனையாவதை தடுப்பதற்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தங்கநகை விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் தங்கம் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் தான் மூன்றில் இரண்டு பங்கு தேவை இருக்கும். ஆனால் அரசின் இந்த முடிவால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x