

பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படும் பெங்களூரு நகரில் வெகுவிரைவில் ஹெலிகாப்டர் பயண சேவை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘பிளேட் இந்தியா’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பயணத்திற்கான கட்டணம் மற்றும் முன்பதிவு உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் என பல பேர் அங்கு வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். அதனால் அங்கு வாகன நெரிசலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் பெங்களூரு நகருக்குள் மட்டுமே சேவை வழங்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்க 2 மணி நேரம் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் போது வெறும் 12 நிமிடங்கள் தான் ஆகுமாம்.
இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே இரு மார்க்கத்திலும் சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மற்றும் மாலை 4.15 என பயணத்திற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10 முதல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளதாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.3,250 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான மைல்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டாக்சி சேவை இப்படி மாற்றம் பெறலாம் எனவும் அந்த நிறுவனத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.