பேங்க் ஆப் பரோடா வங்கியின் நிகர லாபம் 4 மடங்கு உயர்வு

பேங்க் ஆப் பரோடா வங்கியின் நிகர லாபம் 4 மடங்கு உயர்வு
Updated on
1 min read

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிகர லாபம் நான்கு மடங்கு உயர்ந்து ரூ.552 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.124 கோடியாக இருந்தது.

ஆனால் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.12,300 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,046 கோடியாக சரிந்திருக்கிறது. அதே சமயம் மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5.56 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 11.35 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

நிகர வாராக்கடன் 3.08 சதவீதத் தில் இருந்து 5.46 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,843 கோடியில் இருந்து ரூ.1,630 கோடியாக சரிந்திருக்கிறது.

ஐஓபி நஷ்டம் ரூ.765 கோடி

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் ரூ.765 கோடியாக அதிகரித்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நஷ்டம் ரூ.550 கோடியாக இருந்தது.

மொத்த வருமானமும் ரூ.6,769 கோடியில் இருந்து ரூ.5,961 கோடியாக சரிந்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,557 கோடியில் இருந்து ரூ.1,697 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 11 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 21.77 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 7.41 சதவீதத்தில் இருந்து 14.30 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

புதிய சிஇஓ

தற்போது செயல் இயக்குநராக இருக்கும் ஆர்.சுப்ரமணியகுமார், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in