மின் கட்டண உயர்வு போராட்டம் | கோவை, திருப்பூரில் விசைத்தறிகள் முடக்கம்; கடனை செலுத்த தறி இயந்திரங்களை உடைக்கும் பரிதாபம்

கோப்புப்  படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

கோவை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, நேற்று 8-வது நாளாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் வேலையிழந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர். விசைத்தறி இயந்திரங்களை உடைத்து, வங்கிகள் மற்றும் பிற இடங்களில் பெற்ற கடன்களை அடைக்கும் நிலைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே கள்ளப்பாளையத்தை சேர்ந்த பா.ராஜ்குமார் கூறியதாவது: "கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி, சுமார் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட கூலி விவகாரம், பண மதிப்பு நீக்கம், கரோனா காலகட்டம், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் இன்றைக்கு இந்த தொழில் நலிவடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களில் கூலி உயர்வு கோரி நடந்த போராட்டத்தால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விசைத்தறிகள் இயங்கவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்களும் பாவு நூல் தராததால், தொழிலில் கடும் தேக்கம் ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலைபோல பஞ்சு, நூல் விலையிலும் நிலையற்ற தன்மை நிலவுகிறது. நடப்பாண்டில் சுமார் 2 மாதங்கள் மட்டுமே விசைத்தறிகள் இயங்கின. மற்ற மாதங்களில் வாரத்தில் ஓரிரு நாட்களே இயங்கின. தொழிலாளர்களுக்கு கூலிகூட கொடுக்க முடியவில்லை. வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல், விசைத்தறிகளை உடைத்து, இரும்புக் கடைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.

இரும்பு மற்றும் காஸ்டிங் கிலோ ரூ. 35 முதல் ரூ.45 வரை செல்கிறது. ஒரு விசைத்தறி இயந்திரம் 550 கிலோவில் தொடங்கி 800 கிலோ வரை இருக்கும். ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ஒரு விசைத்தறியை உடைத்து பழைய இரும்புக்கு போடும்போது, ரூ. 30 ஆயிரம் வரை கிடைக்கும். இதனை பெற்று கடன் கட்டும் நிலைக்கு தறி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்."இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளபாளையத்தை சேர்ந்த ப.சங்கர் கூறியதாவது, "சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மணப்பாறை, மதுரை, திருநெல்வேலி மற்றும் ராஜபாளையம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். வேலை நிறுத்தத்தால், இவர்கள் ஓட்டுநர்களாகவும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பல ஆண்டு போராட்டத்துக்கு பின் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்றோம். அதுவும் நிலைக்கவில்லை. பலர் கூலியை குறைத்து வழங்குகின்றனர். வேட்டி, சுடிதார் ரகங்களுக்கான விசைத்தறி இங்குள்ளது. பல்லடம், சோமனூர் பகுதியில் ஜவுளி சந்தையை அரசு ஏற்படுத்தி தந்தால், நாங்களே நேரடியாக கொள்முதல் செய்து கொள்வோம்.

அதேபோல் சுல்ஜர், ஏர்ஜெட் போன்ற ஆட்டோ லூம் இயந்திரங்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து வாங்கியுள்ளனர். இதன்மூலம் விசைத்தறியாளர்கள் 3 நாட்கள் உற்பத்தி செய்வதை ஒரே நாளில் உற்பத்தி செய்து கொள்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விசைத்தறியில் அனுமதிக்கப்பட்ட ரகங்களை ஆட்டோ லூம் இயந்திரத்தில் உற்பத்தி செய்ய தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in