

அகமதாபாத்: ஐ.டி துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் எந்த முடிவுகளையுமே எடுக்கவில்லை. அதனால், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன” என்று பேசியுள்ளார்.
அகமதாபாத் இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிலையத்தில் இளம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் பேசியது: “உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் இந்தியாவை சீனாவுக்கு நிகரான போட்டியாளராக உருவெடுக்கச் செய்ய முடியும். 2008 முதல் 2012 வரை நான் லண்டன் எச்எஸ்பிசி வாரியத்தின் உறுப்பினராக இருந்தேன். போர்டு மீட்டிங் நடைபெறும்போது இரண்டு, மூன்று முறை உலகப் பொருளாதார நிபுணர்கள் சீனாவைப் பாராட்டிக் கேட்டிருக்கிறேன். அப்போது ஒரு தொழிலதிபரிடம் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘நிச்சயம் இந்தியாவின் பெயரும் இந்த அரங்கில் பேசப்படும் நாள் வரும்’ என்றார். ஆனால் அதன் பின்னர் இந்தியாவுக்கு என்னவானது என்று தெரியவில்லை.
மன்மோகன் சிங் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. அவர் தனிப்பட்ட முறையில் அசாதாரண திறன் படைத்தவர். ஆனால், ஏனோ அவர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டது. முடிவுகளை எடுப்பதில் தாமதம் நிலவியது. அதனால், உலக அரங்கில் இந்தியாவின் பெயர் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டிய கடமை உங்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
இப்போது இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இருக்கிறது. முன்பு இந்தியாவை இழிவாகப் பார்த்த மேற்குலகினர் இன்று மரியாதையுடன் பார்க்கின்றனர். 1991-ல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களும், பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களும்தான் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தியுள்ளது.
நான் உங்கள் வயதில் இருந்தபோது எனக்கு இவ்வளவு பொறுப்புகள் இருந்ததில்லை. என்னைப் போன்ற இளைஞர்களிடம் இருந்தோ இந்தியாவிடமிருந்தோ இப்போது எதிர்பார்க்கப்படுவது போல் உலகம் ஏதும் எதிர்பார்த்திருக்கவில்லை. நீங்கள் தேசத்தை முன்னேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை நீங்கள் செய்து சீனாவுக்கு இந்தியாவை மிகப் பெரிய சவாலாக மாற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்.
1978 முதல் 2022 வரையிலான 44 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அளப்பரியது. நம்மைவிட சீனா 6 மடங்கு முன்னேறியுள்ளது. இது நகைச்சுவை அல்ல. இளைஞர்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை நிகர் செய்யும்” என்று அவர் பேசினார்.