

சென்னை: டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்கூட்டரான ஜூபிடர் கிளாசிக் வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் யூனிட்களை இந்த ஸ்கூட்டர் நெருங்கும் நிலையில், அந்த மைல்கல்லை முன்னிட்டு ஜூபிடர் கிளாசிக் வாகனத்தை அந்நிறுவனம் களம் இறக்கியுள்ளது.
கடந்த 1978 முதல் டிவிஎஸ் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. டிவிஎஸ் 50 வாகனம் தான் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. தொடர்ந்து ஸ்கூட்டி, விக்டர், ஸ்டார் சிட்டி, அபாச்சி, வீகோ என பல மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்தது. இன்று இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் என்பது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், புதிய ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த வாகனப் பிரிவில் டாப் வேரியண்ட் மாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. 110 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய் வீல், ஆள்-இன்-ஒன்-லாக், கில் ஸ்விட்ச், யூஎஸ்பி சார்ஜர், எகனோமீட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன. முந்தைய மாடல்களை காட்டிலும் கூடுதலாக இரண்டு புதிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.
இந்த வாகனத்தின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,866 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஜூபிடரின் பிற மாடல் வாகனங்களில் 1000 முதல் 3000 ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது. ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் ப்ரீமியம் ரக வாகனம் என டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.