வட்டி விகிதங்களை உயர்த்த அமெரிக்க மத்திய வங்கி முடிவு - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81 ஆக சரிவு

வட்டி விகிதங்களை உயர்த்த அமெரிக்க மத்திய வங்கி முடிவு - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 81 ஆக சரிவு
Updated on
1 min read

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 81 வரை வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டுப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. பணவீக்கத்தை குறைக்க அமெரிக்க மத்திய வங்கி நிதி சார்ந்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், பணவீக்கம் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

இந்தநிலையில், கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க அமெரிக்க மத்திய வங்கி தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் மிக கணிசமாக உயர்த்தப்படக்கூடும் என்பதை அந்த வங்கி சூசகமாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, அந்நியச் செலாவணி சந்தைகளில் நேற்றைய வர்த்தகத்தில் அதன் தாக்கம் உணரப்பட்டது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80.28 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்ததையடுத்து ரூபாய் மதிப்பு 81 வரை வீழ்ச்சியடைந்தது. புதன்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.79.96-ல் நிலைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in