

தங்கள் நிறுவனத்துக்கு முன்தேதி யிட்டு வரி விதித்த விவகாரத்தில் உரிய தீர்வு காணுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கெய்ர்ன் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. ரூ.29,047 கோடி தொகை முன் தேதி யிட்ட வரியாகக் கணக்கிடப்பட்டு அது தொடர்பாக நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பிரிட் டனைச் சேர்ந்த கெய்ர்ன் நிறுவனத்தின் வரி பாக்கி நோட்டீஸ் தொடர்பான கடிதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதேபோன்ற கடிதத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் கெய்ர்ன் நிறுவனம் அனுப்பியுள்ளது.
முன்தேதியிட்ட வரி விதிப்பு இருக்காது என பாஜக அரசு தெரி வித்தது. ஆனால் தங்கள் நிறுவனத் துக்கு முன் தேதியிட்ட வரி விதிப்பு நீக்கப்படவில்லை. இது வெளிநாட்டு முதலீடுகளை நிச்சயம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக அதிக முதலீடு தேவைப்படும் எண்ணெய், எரிவாயு அகழ்வு துறைகளில் இதுபோன்ற முன்தேதியிட்ட வரி விதிப்பு நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு உத்தேச வரி விதிப்பு குறித்த நோட்டீஸ் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களை பாதிக்கும் வரி விதிப்பு இருக்காது எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 1,000 நாள்களாகியும் தங்கள் பிரச் சினையைத் தீர்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இந்தியா இங்கிலாந்து பரஸ்பர முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்த அடிப் படையில் வழக்கு தொடர முயன்றது. ஆனால் அந்த வழக்கை எடுக்கும் முன்பாக வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவன வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
கெய்ர்ன் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டு ஆதாயம் அடைந்ததற்காக வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கான நோட்டீஸ் 2014-ல் அனுப்பப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பிரச் சினையை தீர்ப்பாயத்துக்குக் கொண்டு சென்றது. இதை விசா ரிக்க 3 பேரடங்கிய குழு அமைக்கப் பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, இதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி அரசு தரப்பில் கோரப்பட்டது. வேதாந்தா குழுமம் தொடுத்துள்ள வழக்கை முதலில் எடுத்துக் கொள் ளுமாறு அரசு தரப்பில் கோரப் பட்டது. இந்திய அரசு 560 கோடி டாலர் இழப்பீடு தர வேண்டும் என கெய்ர்ன் எனர்ஜி கோரியுள்ளது. முன் தேதியிட்ட வரி விதிப்பு காரண மாக தங்களது பங்குகள் சர்வதேச சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்தது. அதற்கான இழப்பீட்டை இந்திய அரசு தர வேண்டும் என கெய்ர்ன் எனர்ஜி கோரியுள்ளது. இந்த வழக்கு விசாரணை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.