

இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக் கிழமை உயர்ந்து முடிவடைந்தன. ஆரம்பத்தில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம், முடியும்போது உயர்ந் திருந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 25641 புள்ளியிலும், நிப்டி 7663 புள்ளியிலும் முடிவடைந்தன. கடந்த 10 நாட்களில் அதிகபட்ச புள்ளியில் சென்செக்ஸ் முடிவடைந்தது.
தனியார் வங்கி, நிதி மற்றும் டெக்னாலஜி பங்குகளில் நிலவும் வாங்கும்போக்கு காரணமாக பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன. ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிந்து முடிவடைந்தது.
இந்த வாரத்தில் மட்டும் முக்கிய குறியீடுகள் 3 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை சரிவு, பருவமழை ஆரம்பித்தது, பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை மற்றும் காலாண்டு முடிவுகள் சாதகமாக வர ஆரம்பித்திருப்பது ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
ஐடி டெக்னாலஜி குறியீடு ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இதற்கடுத்து வங்கித்துறை குறியீடு 0.77 சதவீதமும், கேபிடல் குட்ஸ் குறியீடு 0.42 சதவீதமும் உயர்ந்தன.
மாறாக பவர் குறியீடு 1.34%, ரியால்டி 0.88%, கன்ஸ்யூமர் டியூரபிள் 0.88 மற்றும் ஆயில் அண்ட் கேஸ் குறியீடு 0.77 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் ஹீரோ மோட்டோ கார்ப், டிசிஎஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் விப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. டாடா பவர், பிஹெச்இஎல், ஹிண்டால்கோ, கெயில் மற்று மாருதி ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
என்பிஎப்சி பங்குகள் உயர்வு
பேமெண்ட் மற்றும் சிறிய வங்கிகளுக்காக விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்ததால் வங்கி அல்லாத நிதி நிறுவன (என்பிஎப்சி) பங்குகள் உயர்ந்தன.
முத்தூட் பைனான்ஸ் 3.76 சதவீதமும், மணப்புரம் பைனான்ஸ் 3.3 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.
இதேபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருப்பதால் அந்த பங்கு 3 சதவீதம் வரை வெள்ளிக்கிழமை உயர்ந்தது. சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டி ஜூன் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் இந்த பங்கு உயர்ந்தது மட்டுமல்லாமல் ஐடி துறையில் இருக்கும் மற்ற பங்குகளும் உயர்ந்துவிட்டன.