

‘வாழ்க்கை என்னும் ஹோட்டலில் பரி மாறப்படும் தகவல், மெனு கார்ட்டை பார்த்து ஆர்டர் செய்த உணவாக இருப்பதில்லை’ என்றார் உளவியலாளர் ‘டான் கில்பர்ட்’.
`சண்டை போட்டு கேட்டதை பெறும் பழக்க மில்லாதவர்கள் அது போன்ற சந்தர்ப்பங்களில் சூழ்நிலை கைதியாகி வேண்டியதை கேட்டுப் பெறாமல் போட்டதை ஏற்றுக்கொள்ளப் பழகிவிடுகின்றனர்’ என்கிறார். ஹோட்டல் என்றால் பரவாயில்லை, ஏதோ வந்ததை பெற்றோம், வெந்ததை தின்றோம் என்று விட்டுவிடலாம். வியாபாரத்தில் சரியான தகவல் இல்லாமல், இருக்கும் தகவலை பெறாமல், பெற்ற தகவலை அலசாமல், அலசிய தகவலை மற்றவருடன் பங்கிடாமல் இருப்பதால்தான் முடிவுகள் தவறாகி, கம்பெனி தாறுமாறாய் தறிகெட்டுப் போய் தள்ளாடி தடம்புரள்கிறது.
கண்கட்டு போட்டது போல் மனம் முடிவெடுக் கத் தேவையான, எளிதில் கிடைக்கும் தகவலை பாராமல், பயன்படுத்தாமல், பங்கிடாமல் இருப் பதை ‘கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு’ (BoundedAwareness) என்கிறார்கள் ‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ‘மேக்ஸ் பாஸர்மேன்’ மற்றும் ‘டாலி சுக்’.
நேரமின்மை காரணமாக எடுக்கப்படும் அவசர முடிவுகள் அல்ல நாம் இங்கு பேசுவது. நேரம் இருந்தும், தகவல் இருந்தும், அதை அலசத் தேவையான அனைத்தும் இருந்தும் கடிவாளம் போட்ட கண்கள் அதை பாராமல், கட்டுண்ட சிந்தனை அதை கண்டுகொள்ளாமல் முடிவுகள் எடுக்கப்பட்டு அது தவறான பின்பு ‘சே, தெரிஞ்சே எப்படி தப்பு செய்தேன்’ என்று நொந்து கொள்கிறோமே அது தான் கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு.
முடிவெடுக்கும் போது இதன் தாக்கத்தை, உருவாகும் காரணத்தை அதற்கான தீர்வுகளை ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘Decisions with blinders’ என்ற கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்கள்.
தகவலை பார்க்காமல் இருப்பது
செய்யும் செயலில் கவனம் தேவைதான். ஆனால் அந்த செயலின் மீது அதீத கவனம் செலுத்தும்போது விழிப்புணர்வு பாதிக்கப் படுகிறது. அச்செயலை பக்கவாட்டிலிருந்து பாதிக்கும் சங்கடங்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஃபில்டர் காபி கம்பெனிகள் தங்கள் பிராண்டுகளை பராமரிப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வந்ததாலோ என்னவோ கூட்டு குடும்பங்கள் குறைந்து வீட்டில் பெரியவர்கள் இல்லாமல் இருப்பதை, பெண்கள் வேலைக்கு போவதை, அதனால் பெருகும் நேரமின்மையால் ஃபில்டர் காபி போட முடியாமல் இன்ஸ்ட்ண்ட் காபிக்கு மாறி வருவதை கவனிக்கத் தவறினர். கவனித்தவை மட்டும் கவனத்தை கவர்ந்ததே ஒழிய கவனத்தில் கொள்ள வேண்டியவை கவனக்குறைவால் கவனிக்கப்படாமல் போக பல ஃபில்டர் காபி ப்ராண்டுகள் இன்ஸ்டண்ட்டாய் காணாமல் போயின!
எதிரே இருப்பதை மட்டும் பார்க்கப் பழகுவதால் எதிர்பாராததை எதிர்பார்க்கத் தவறுகிறோம். ‘ஒன்றை அதிகம் பார்க்காமல் இருந்தால் அதுவே அதிகம் பார்க்க முடியாத ஒன்றாகிவிடும்’ என்றார் அமெரிக்க நாவலாசிரியர் ‘தாமஸ் வுல்ஃப்’!
தகவலை கேட்காமல் இருப்பது
சில சமயங்களில் விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பதற்குள் மனம் தானாய் ஒரு முடிவிற்கு வந்துவிடுகிறது. இது போன்ற தருணங்களில் சரியான முடிவெடுக்கத் தேவையான தகவலைப் கேட்டுப் பெற மறுக்கிறது. இதை விளக்கும் ‘உறுதிப்படுத்தல் சார்புநிலை’ என்ற உளவியல் கோட்பாட்டை சில வாரங்களுக்கு இங்கு படித்தது நினைவிருக்கலாம்.
9/11 அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சதாம் ஹுசேன் கண்டிப்பாய் உதவியிருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் கருதியது. தங்கள் கருத்தை உறுதிசெய்ய தேவையான தகவல்களை கேட்டுப் பெறக் கூட தோன்றாமல் தாங்கள் நினைத்தது சரியாகத் தான் இருக்கும் என்று உறுதியாக நம்பியது. பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகள் மூலம் தான் இந்த எண்ணம் தவறானது என்று தெரிந்தது என்று ‘Against all enemies’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் அப்பொழுது பயங்கரவாத எதிர்ப்பு துறையில் பணி புரிந்த ‘ரிச்சர்ட் கிளார்க்.’
தகவலை பயன்படுத்தாமல் இருப்பது
தகவலைப் பார்க்காமல், தகவலை கேட்டுப் பெறாமல் சிந்தனை கட்டுண்டு கிடப்பது ஒரு புறமென்றால், கையில் கிடைத்த தகவலை கண்டுகொள்ளாமல், அதை பயன்படுத்தாமல் முடிவெடுத்து படுகுழியில்விழுவது இன்னொரு வகை வயித்தெறிச்சல். ‘ஃபேர் அண்டு லவ்லி’ உபயோகிப்பவர்களில் குறிப்பிடும்படியான சதவீதத்தவர்கள் ஆண்கள் என்று பல்வேறு ஆய்வறிக்கைகள், மார்க்கெட் ரிசர்ச் ரிப்போர்டுகள் கூறியிருந்தாலும் அத்தகவலை பயன்படுத்தி ஆண்களுக்கு பிரத்யேக சிவப்பழகு க்ரீம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அதன் கம்பெனி ‘ஹெச்.யு.எல்’லிற்கு தோன்றாமல் போனது.
‘இமாமி’ அந்த தகவலை பயன்படுத்தி ‘ஃபேர் அண்டு ஹாண்ட்சம்’ என்ற பிராண்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின் தான் விழித்துக்கொண்டு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தது. என்ன பிரயோஜனம், ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் சிவப்பாய் சிரிக்க ஹெச்.யு.எல்லின் புதிய பிராண்ட் சிரிப்பாய் சிரித்தது.
சமயத்தில் வெற்றியும் கண்ணை மறைத்து கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வில் கட்டுண்டு கிடக்க காரணமாகிறது. மெக்கானிக்கல் வாட்ச் தயாரிப்பில் ஸ்விட்சர்லாந்து நாட்டு கம்பெனிகள் கோலோச்சிய காலத்தில் ‘க்வார்ட்ஸ்’ தொழிற்நுட்பம் அதே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மெக்கானிக்கல் தந்த வெற்றியின் மமதையில் இருந்ததாலோ என்னவோ க்வார்ட்ஸ் தொழிற்நுட்பத்தை ஸ்விஸ் கம்பெனிகள் சட்டை செய்யாமல் அதை மற்ற நாடுகள் தயாரிக்க விட்டுவிட்டன. க்வார்ட்ஸ் வாட்ச்சுகளை மக்கள் பெருவாரியாக ஏற்றுக்கொள்ள உலக வாட்ச் மார்க்கெட்டில் ஸ்விஸ் கம்பெனிகள் தங்கள் முன்னணி நிலையை இழந்தன.
தகவலை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது
தகவலின் முக்கியத்துவம் அதை பயன் படுத்துவதில் மட்டுமல்ல, பிறரிடம் பகிர்ந்து கொள்வதிலும் உண்டு. கிடைக்கும் தகவல் தேவைப்படுகிறவரிடம் பகிர்ந்துகொள்ளப்படா மல் போவதால் எடுக்கப்படும் முடிவுகள் தவறாகி போகின்றன. இதுவும் கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் கைங்கர்யமே.
அமெரிக்க 9/11 தாக்குதலை ஆராய அமைக்கப்பட்ட ‘9/11 கமிஷன்’ தன் இறுதி அறிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமும் தீவிரவாதிகள் பற்றி தகவல்கள் சிறியஅளவேனும் இருந்தன என்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறையான எஃப்பிஐ-யிடம் அமெரிக்காவில் தங்கியிருந்த தீவிரவாதிகள் பற்றிய தகவலும், விமான போக்குவரத்து நிர்வாகத்திடம் சந்தேகத்திற்குரிய நபர்கள் விமானப் பயிற்சி எடுத்து வரும் செய்தியும், சிஐஏ மற்றும் ஜனாதிபதி மாளிகையிடமும் கூட தகவல்கள் இருந்தனவாம். ஒவ்வொரு துறையும் தன்னிடமிருந்த தகவலை மற்ற துறையினரிடம் பகிர்ந்துகொண்டிருந்தால் பயங்கரவாத சதி திட்டத்தின் முழு வடிவம் தெரிந்து 9/11 என்ற கொடுமை நடக்காமலே கூட தடுத்திருக்கலாம் என்கிறது!
இதே கதைதான் 26/11 பம்பாய் பயங்கரத்திலும் நடந்திருக்கவேண்டும். ஒரு முறை பட்டுக்கொண்ட அமெரிக்கா அதிலிருந்து சுதாரித்து, எழுந்து கிடைத்த தகவல்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதால் அதன் பிறகு அங்கு எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை. நாம் இன்னமும் பாடம் பயிலாமல், கிடைத்த தகவலை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதால் தான் இங்கு தினம்தோறும் தீவிரவாதிகளுக்கு தலை தீபாவளி!
செய்யும் செயலில் ஆழ்ந்த கவனம் இருப்பது நல்லது தான். ஆனால் முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது நிர்வாகிகள் கட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாத்துகொள்வதுமுக்கியம். எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந் தால் தேவையான அனைத்து தகவலும் பெறப் பட்டதா, பார்க்கப்பட்டதா, பரீசீலிக்கப்பட்டதா, பயன்படுத்தப்பட்டதா, பகிர்ந்துகொள்ளப்பட்டதா என்று பார்ப்பது பயன் தரும்.
அந்தகால பீம்சிங் ‘ப’ வரிசை படங்கள் போல பல ‘ப’னாக்கள் இருந்தால் தான் போட்டி பின்னும் பிசினஸ் உலகில் பின்னி பெடலெடுத்து பிரகாசிக்க முடியும் என்பது புரிகிறதா!
தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com