

இந்திய மொபைல் வாலட் சந்தை 2021-22-ம் நிதி ஆண்டுக்குள் ரூ.30 ஆயிரம் கோடியை எட்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டு வளர்ச்சி வீதம் 141 சதவீதமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 2015-16 நிதியாண்டிலிருந்து 2021-22 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இந்திய தொழில் வர்த்தக சபையின் ஆராய்ச்சி அமைப்பான ஆர்என்சிஓஎஸ் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவதில் உள்ள வளர்ச்சி, இ-காமர்ஸ் நிறுவனங்களில் செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த வளர்ச்சி இருக்கும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. இந்த ஆய்வில் மேலும் கூறியுள்ளதாவது:
2015-16 நிதியாண்டில் மொபைல் - வாலட்டுகளின் சந்தை மதிப்பு ரூ.154 கோடியாக உள்ளது. வங்கிகள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக எம் வாலட் பரிவர்த்தனை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளின் அதிக அளவிலான பரிவர்த்தனைகள் இதன் மூலம் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
எம்-வாலட் மூலம் மூன்று வழிகளில் பரிவர்த்தனைகள் நடைபெறும். முக்கியமாக வாலட்டிலிருந்து வாலட்டுக்கும், வங்கியிலிருந்து வாலட்டுக்குமான, வாலட்டில் இருந்து வங்கிக்குமான பரிவர்த்தனை நடக்கிறது. இந்த பரிவர்த்தனைகள் 38 சதவீதமாக இருக்கும். இதனையடுத்து வாலட்டிலிருந்து ரீசார்ஜ் செய்வது, மின் கட்டணம், டீடிஹெச் மற்றும் இதர சேவைகளை மேற்கொள்வது 31 சதவீதமாக இருக்கும்.
மீதமுள்ள 31 சதவீத பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது, திரைப்பட முன்பதிவு, உணவகக் கட்டணம், மெட்ரோ ரயில் ரீசார்ஜ் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.
தற்போது மொபைல் மூலம் பரிவர்த்தனை மற்றும் தனி பயன் வாலட்டுகள் மூலம் பரிவர்தனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது வாலட் மூலம் பணத்தை எடுப்பது என்கிற நடைமுறை அனுமதிக்கப்படவில்லை. இந்த வாலட்டுகளின் விதிமுறைகளை ஆர்பிஐ தளர்த்த வேண்டுமென இந்த ஆய்வு ஆலோசனை கூறியுள்ளது.