

புவனேஸ்வர்: ஒடிசாவில் வேதாந்தா குழுமம் ஏற்கெனவே ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அக்குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநில அரசு சார்பில் இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து அனில் அகர்வால் கூறுகையில், “ஒடிசாவில் கூடுதலாக ரூ.25,000 கோடி முதலீடு செய்து எங்கள் அலுமினியம், சுரங்கத் தொழில்களை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஒடிசா மாநில ஜிடிபியில் எங்கள் பங்களிப்பு 4% ஆக உயரும். நவீன் பட்நாயக் தலைமையில் ஒடிசாவில் தொழில் தொடங்குவதற்கான சூழல் மேம்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த மாநிலமாக ஒடிசா உள்ளது. ஒடிசாவின் சிறப்பான கலாச்சார, திறன்மிக்க வேலை ஆட்கள், இயற்கை வளங்கள் ஆகியவை நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. வேதாந்தாகுழுமம் ஒடிசாவில் 5 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது” என்றார்.