

உலகின் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா இருக்கிறது. பொதுத்துறை முதலீடு வளர்ந்து வரும் சூழ்நிலையில் தனியார் துறை முதலீடுகளும் வரும் பட்சத்தில் வளர்ச்சி மேலும் உயரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
மத்திய பிரதேச சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பேசும் போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பொதுவாக முதலீடுகள் விஷயத்தில் மத்திய அரசு மெதுவாக இருக்கும். ஆனால் இப்போது அரசு முதலீடுகள் செய்து வருகிறது. தனியார் துறை முதலீடுகள் இன்னும் பெரிய அளவில் வரவில்லை. தனியார் துறை முதலீடுகளும் வரும் பட்சத்தில் வளர்ச்சி மேலும் உயரும்.
சர்வதேச அளவில் மந்தமான சூழல் இருப்பதினால் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் சரியான பருவமழை, அதனால் விவசாய உற்பத்தி ஆகியவை காரணமாக உள்நாட்டு நுகர்வு உயர்வு உயரும். தவிர பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, சாதகமான வட்டி விகிதம் ஆகியவை காரணமாக கடனுக்கு செலுத்தும் வட்டி குறையும். இந்த சாதகமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய சரக்குகளின் விலை குறைவு ஆகியவை இந்தியாவுக்கு சாதகமாகும். விலை குறைவு காரணமாக இந்தியாவின் இறக்குமதி செலவு குறைந்திருக்கிறது. மீதமாகும் இந்த தொகையை கிராம பொருளாதாரம் மற்றும் கட்டுமானத்துறையில் முதலீடு செய்ய முடியும். இது ஒரு சாதகம் என்றாலும் சவால்களும் இருக்கிறது. சர்வதேச மந்த நிலை எங்களை பாதித்திருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிப்படைந்திருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுப்பதை எளிதாக்கி இருக்கிறது. இதன் மூலம் நம்பிக்கை உருவாகி இருக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பிரதேசம் உற்பத்தி மையமாக திகழும் என்று ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.