Published : 09 Sep 2022 06:09 AM
Last Updated : 09 Sep 2022 06:09 AM

அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மாற்றாக புதிய தளம்: இ-காமர்ஸ் துறையை மாற்றி அமைக்கும் என ஓஎன்டிசி சிஇஓ கோஷி தகவல்

புதுடெல்லி: திறந்தவெளி இ-காமர்ஸ் கட்டமைப்பான ஓஎன்டிசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.இந்நிலையில், ஓஎன்டிசி அறிமுகத்துக்குப் பிறகு இ-காமர்ஸ் துறைமுற்றிலும் மாறிவிடும் என்று ஒஎன்டிசி-யின் தலைமை செயல்அதிகாரி டி.கோஷி தெரிவித்துள்ளார்.

“தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் கட்டுமீறிய வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தவகையில், ஓஎன்டிசி என்பது வளரும் நாடுகளுக்கு மட்டுல்ல வளர்ந்த நாடுகளுக்கும் தீர்வு வழங்கக்கூடியதாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிறுவனங்களின் அதீத வளர்ச்சியால் உள்ளூரில் உள்ளசிறு வியாபாரிகள் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இதுதவிர, இத்தளங்கள் மூலம்விற்பனை செய்பவர்கள், தங்கள்வருவாயில் கணிசமான தொகையை இந்நிறுவனங்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டியதாக உள்ளது. அதேபோல், டெலிவரி நிறுவனங்களான சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா உள்ளிட்டவற்றில் பங்கேற்பவர்களும் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை இந்நிறுவனங்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டும். இதனால், விற்பனையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இ-காமர்ஸ் துறையை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்தக் கட்டமைப்பு ஓஎன்டிசி (Open Network for Digital Commerce) என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கட்டமைப்பின் வழியே, யார் வேண்டுமானாலும் தங்கள் சேவைகளை, தயாரிப்புகளை சந்தைப்படுத்த முடியும். இந்தக் கட்டமைப்பின் மூலம் உள்ளூர் நிறுவனங்கள் பயன் அடையும் என்று கூறப்படுகிறது. யுபிஐ கட்டமைப்பானது இந்தியாவின் பணப்பரிவர்த்தனை முறையில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது போல, ஓஎன்டிசி இ-காமர்ஸ் துறையில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஒஎன்டிசி-யின் சிஇஓ டி.கோஷி கூறுகையில், “எந்த நிறுவனங்கள் வேண்டுமானலும் ஓஎன்டிசியில் இணையலாம். அதேபோல், வாடிக்கையாளர்கள் ஓஎன்டிசி தளம் மூலம் தாங்கள் விரும்பும் எந்த நிறுவனத்திலிருந்தும் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். ஒஎன்டிசி எல்லாரையும் உள்ளடக்கி செயல்படும் தளமாகும். இதனால், இனி இ-காமர்ஸ் என்பது தனி நிறுவனங்களைச் சார்ந்து இல்லாமல் எல்லாரும் பங்கேற்கும் ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x