

புதுடெல்லி: ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்ள வசதியாக வோஸ்ட்ரோ கணக்கை விரைவாக தொடங்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா இப்போது ஏற்றுமதிமற்றும் இறக்குமதி பரிவர்த்தனையை அமெரிக்க டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து விடுகிறது. மேலும், டாலருக்கு நிகரானரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. மேலும் அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கப்படும் எனகடந்த ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதையடுத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை இந்திய ரூபாயில் மேற்கொள்ள வசதியாக வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்கவேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ‘வோஸ்ட்ரோ கணக்கு’களை திறக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை டாலருக்குப் பதிலாக ரூபாயிலேயே செலுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியாளர்களும் தங்களுக்கு வர வேண்டிய தொகையை ரூபாயிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.