

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் முக்கியக் காரணிகளாக உள்ளன.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 312-ஆக இருந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இது ரூ.38 ஆயிரத்து 32-ஆக குறைந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 உயர்ந்து,ரூ.37 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து, ரூ.4,730-ஆக இருந்தது. இதேபோல, வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.59.50 ஆகவும்,கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.59 ஆயிரத்து 500-ஆகவும் இருந்தது.
இதுகுறித்து சென்னை தங்கம்மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “ஐரோப்பிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
இது சர்வதேச அளவில் எதிரொலித்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயருகிறது” என்றார்.