

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது 2%-ல் இருந்து 13% ஆக உயர்ந்துள்ளதாகவும், இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு வெகுவாக குறைந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறித்து விவரித்தார்.
உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்திருப்பதையும், இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சூழலில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யாவிடம் இருந்து அதனை வாங்கும் இந்தியாவின் முடிவு துணிச்சலானது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், இதற்கான பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என கூறினார். இதன் காரணமாகவே, சில மாதங்களுக்கு முன்பு வரை 2% ஆக இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 13% ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு பெருமளவு குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், நாட்டு நலனுக்கு முதல் முன்னுரிமை கொடுக்கும் அரசாக மத்திய அரசு இருப்பதாலேயே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள தற்போதைய சூழலில், சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான உத்தியாகவும் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் செயல் மத்திய அரசுக்கானது மட்டுமல்ல என தெரிவித்த மத்திய நிதி அமைச்சர், விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.