

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் மத்திய அரசு உத்தேசித்துள்ள நான்கு அடுக்கு வரி முறை பாதுகாப்பானதுதான் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த பனகாரியா தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பனகாரியா, இந்த நான்கு அடுக்கு முறையால் பணவீக்க விகிதம் உறுதியாக குறைவதுடன் குறைந்த வரிவிதிப்பால் நுகர்வோர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாடு முழுவதும் உற்பத்தி பொருளுக்கு ஒரே வரி விதிப்பு முறை நிலவும். இதில் வரி தொடர்பான விளக்கங்கள் எதுவும் இல்லை, இரட்டை வரி விதிப்பை விட, ஒரு முனை வரி விதிப்பு முறை சிறப்பானது என்று கூறினார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் மூன்றா வது கூட்டம் வரும் நாட்களில் கூட உள்ளது என்று குறிப்பிட்ட அவர், சொகுசு பொருட்கள், புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களுக்கான கூடுதலாக வரி விதிக்க மத்திய நிதியமைச்சகம் முன்வைத்த யோசனைக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த நிதியை கூடுதல் வரி மூலம் ஈடுசெய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் நான்கு அடுக்கு வரி விதிப்பு முறையையும் மத்திய அரசு கூறியுள்ளது. நிரந்தர வரி வீதம் 12% மற்றும் 18%-மாகவும், உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கு 6% எனவும், சொகுசுப் பொருட் களுக்கு 26% எனவும் நான்கு அடுக்கு வரி முறைகளை முன் வைத்துள்ளது என்றும் கூறினார்.
வரும் நிதியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் 1) ஜிஎஸ்டி வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.