

திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்பட்ட மீன் சந்தை, ரூ. 1 கோடியே 41 லட்சத்துக்கு நேற்று ஏலம் போனது.
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் சந்தை, திருப்பூர் பழைய பேருந்து நிலைய வளாகம் இடிக்கப்பட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. விரைவில் பேருந்து நிலைய வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தென்னம்பாளையம் மீன் சந்தை நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே ரூ.70 லட்சத்துக்கு கோரப்பட்டிருந்த நிலையில், ஏலம் எடுக்காத நபர் 48 மணி நேரத்தில் ரூ.73 லட்சம் செலுத்தினார்.
இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நேற்று மறு ஏலம் நடைபெற்றது. மீன் சந்தையில் 28 கடைகள் கொண்ட ஒரு கூடாரமாக, கணக்கில் கொள்ளப்பட்டு மொத்தமாக 4 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். இதில், ரூ. 1 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
கடந்த ஏலத்தைவிட இருமடங்கான தொகையாகும். அதேபோல, பேருந்து நிலைய வளாகத்தில் 84 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 5 கவுன்டர்கள் கொண்ட ஒரு ‘ஃபுட்கோர்ட்’ மற்றும் 2 உணவகங்களுக்கான ஏலம் இன்று (செப்.7) நடைபெறுகிறது. இதுதொடர்பாக அலுவலர்கள் கூறும்போது, “சீலிடப்பட்ட டெண்டருக்கு வைப்புத்தொகை ரூ. 3 லட்சமும், பொது ஏலத்துக்கு வைப்புத்தொகை ரூ.3 லட்சமும் செலுத்த வேண்டும்.
இன்று காலை ஏலம் நடைபெறுகிறது. அதேபோல ‘ஃபுட்கோர்ட்’ மற்றும் உணவகங்களுக்கு வைப்புத்தொகை வேறுபடும்,” என்றனர்.