பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இந்தியா நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்துள்ளது: அருண் ஜேட்லி

பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இந்தியா நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்துள்ளது: அருண் ஜேட்லி
Updated on
1 min read

உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இந்தியா சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தாக்குப்பிடித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் தேவையான கொள்கை முடிவுகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ஜேட்லி உறுதி அளித்தார்.

உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் சர்வதேச அளவில் ஏற்படும் தேக்க நிலையிலிருந்து காக்க உதவும் அல்லது சமன் செய்ய உதவும். அத்துடன் பாதகமான சூழல் உருவாவதிலிருந்து காக்க உதவும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு முந்தைய கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியது:

மத்திய அரசு அந்நிய நேரடி முதலீடுகளுக்கான அனுமதியை கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை அனுமதித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரும்பாலான துறைகளில் பரீசீலனை செய்யப்பட்டு 90 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கபட்டுள்ளன.

மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு தொழில் புரிவதற்கான எளிதான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்கள் மிகப் பெரிய அளவுக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. பல துறைகள் தாங்களாகவே அந்நிய முதலீடுகளை திரட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு ஆணையம் எந்த அனுமதிகளையும் இதுவரை நிறுத்தி வைக்கவில்லை.

ஒரு புறம் நாம் சர்வதேச வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டுள்ளோம் என்பதால் அது குறித்த விவகாரங்களை அக்கறையோடு கவனித்து வருகிறோம். சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தத்தால் நாம் நடுநிலையாக இருக்கிறோம்.

சர்வதேச போட்டியில் இந்தியாவின் குறியீடு கடந்த 39 ஆண்டுகளில் இப்போதுதான் ஏற்றம் கண்டுள்ளது. சமீபகாலத்தில் நாம் வேகமாக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் தொழில்கள் தொடங்குவது எளிதாகியுள்ளது.

பல பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டிய அவர், ஒவ்வொரு குறிப்பிடத்தக்க முடிவுகளுக்கு பின்னாலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், இந்தியா முதலீடுகள் மேற்கொள்வதற்கு ஏற்ற நாடு என்பதை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்காக உள்ளது என்று குறிபிட்டார்.

தொழில் புரிவதிலும், சர்வதேச போட்டித் தன்மை குறியீட்டிலும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கேற்ப பல கொள்கை முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

தொழில் புரிவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குவதில் மாநில அரசுகளும் ஒத்துழைப்பாக இருந்தன என்பதை சுட்டிக் காட்டினார். பிரிக்ஸ் நாடுகளிடம் அதிகபட்ச ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கியுள்ள புதிய வங்கியான நியூ டெவலப்மெண்ட் பேங்க், வரி அமைப்புகள் குறித்த விவகாரங்களில் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜேட்லி பேசினார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்த ஐந்து நாடுகள் மட்டுமே உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அதேபோல ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகளின் பங்களிப்பு அபரிமிதமானது. இதனால் பரஸ்பரம் முதலீடுகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in