

இந்திய பொருளாதாரத்தின் உண்மையான சீர்திருத்தவாதி முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்ம ராவ் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பத்திரிகையாளர் சஞ்சய்யா பாரு எழுதியுள்ள ‘1991: ஹவ் பிவி.நரசிம்மராவ் மேட் ஹிஸ்ட்ரி’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்ம ராவ் உண்மையான சீர்திருத்த வாதியாக இருந்தார். அவரது சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடு அடுத்தடுத்த ஆண்டுகளில் உயரு வதற்கு காரணமாக இருந்தன.
மேலும் பிவி. நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் அவரது முயற்சிகளுக்கான பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை.
நரசிம்மராவ் மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. என்னால் இதைச் சொல்லமுடியும். ஏனெனில் நான் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அனைத்து பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பின்னால் நரசிம்மராவ் இருந்தார். அவர் தொடர்ச்சியாக சீர்திருத்தங்களை புகுத்திக் கொண்டே இருந்தார். இதை அவரது கட்சியைச் சேர்ந்த பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எதிர்விளைவுகளுக்குக் கவ லைப்படாமல் அனுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை தகர்த்தவர். ஆனால் மிக நுட்பமான முறையில் தொடர்புகளைக் கொண்டவர். ஆனால் அதற்கான நன்றியும் புகழும் அவருக்கு சேரவில்லை. பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதில் மன்மோகன் சிங்கிற்கு முழு பக்கபலமாக இருந்தார். சீர்திருத்தங்களை நேரத் துக்கு ஏற்ப அழுத்தம் கொடுக்க அரசியல் ரீதியாகவும் இருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.