

புதுடெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, 53.88 மில்லியன் டன்னிலிருந்து 8.27 சதவீதம் அதிகரித்து 58.33 டன்னாக உள்ளது.
இதுகுறித்து நிலக்கரி அமைச்சம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 2022-ல், கோல் இந்தியா நிலக்கரி கழகம், இதர பெரிய நிலக்கரி சுரங்கங்கள் முறையே, 46.22 மில்லியன் டன் மற்றும் 8.02 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து 8.49% மற்றும் 27.06% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இருப்பினும், இந்திய அரசுக்கு சொந்தமான சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட், ஆகஸ்ட் மாதத்தில் 17.49 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்தது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி சுரங்க நிறுவனங்களில் 25 சுரங்கங்கள் 100 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பதிவு செய்தன. அதேசமயம், 5 சுரங்கங்களின் உற்பத்தி அளவு 80% முதல் 100% வரை இருந்தது.
அதேநேரத்தில், நிலக்கரி விநியோகம், ஆகஸ்ட் 2021-ன்னுடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் 2022-ல் 60.18 மில்லியன் டன்னிலிருந்து 63.43 மெட்ரின் டன் அளவுக்கு, 5.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின் தேவையின் அதிகரிப்பால், ஆகஸ்ட் 2021-ல் 48.80 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் 2022-ல் 10.84 சதவீதம் அதிகரித்து, 54.09 மில்லியன் டன்னாக உள்ளது. ஆகஸ்ட் 2021-ல் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்தியை விட, ஆகஸ்ட் 2022-ல் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 3.14 சதவீதம் உயர்ந்துள்ளது.