Published : 05 Sep 2022 07:17 AM
Last Updated : 05 Sep 2022 07:17 AM
புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் தரக்கூடியவை அல்ல என்றும் அவற்றை அரசு நடத்துவது தேவையற்ற பொருளாதார இழப்புதான் என்றும் மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மேலும் அவர் கூறியதாவது. “ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அந்த வருவாயை முதலீடாகக் கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும். ஆனால், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் வளத்தைப் பெருக்கக் கூடியதாக இல்லை. மாறாக, அவை தொடர்ந்து செயல்படுவதற்கு அரசு நிதி வழங்க வேண்டியதாக உள்ளது. அந்த வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வளத்தை சுரண்டுகின்றன. ஒரு நிறுவனத்தால் தனது இயக்கத்துக்குத் தேவையான வருவாயை ஈட்ட முடியவில்லை என்றால், அதன் அடிப்படைக் கட்டமைப்பிலே மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பு மட்டும்தான் ஏற்படும். பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது என்பது அரசுக்கு தொடர் இழப்புதான். என்னைப் பொறுத்தவரையில் அரசு தொழில் துறை செயல்பாட்டில் ஈடுபடவே கூடாது” என்றார்.
மேலும் அவர், “பொதுத்துறை நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவை சுதந்திரமாக செயல்படக்கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இதனால், சூழலின் மாற்றுத்துக்கு ஏற்ப அவை தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை. விளைவாக, அவை திறனற்று இருக்கின்றன. மாருதி சுசூகி நிறுவனத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளம். அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவரையில் தேங்கி இருந்தது. தனியார் நிறுவனமாக அது மாற்றப்பட்டப் பிறகு பெரும் வளர்ச்சியை எட்டியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்ல ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. இதனால் பல நாடுகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவருகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT