

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார்.
சைரஸ் மிஸ்திரி நேற்று அகமதாபாத்தில் இருந்து காரில் மும்பை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் சாலைத் தடுப்புச்சுவரில் அவர் வந்த பென்ஸ் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலே சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மேலும் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் குஜராத் மாநிலம் வாபியில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “மதியம் 3.15 மணி அளவில், சூர்யா ஆற்றின் மேம்பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
சைரஸ் மிஸ்திரிக்கு வயது 54. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
சைரஸ் மிஸ்திரியின் மரணம் தொழில் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் சைரஸ் மிஸ்திரிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “சைரஸ் மிஸ்திரியின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. மிகவும் நம்பிக்கைக்குரிய தொழிலதிபரான மிஸ்திரி, இந்தியா பொருளாதாரத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். வர்த்தகம் மற்றும் தொழில் உலகத்துக்கு அவரது மறைவு மிகப் பெரும் இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறும்போது, “சைரஸ் மிஸ்திரியின் மறைவு மிகுந்த வருத்தம் தருகிறது. வாழ்க்கை மீது அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். இளம் வயதில் அவர் காலமாகி இருப்பது மிகவும் துயரகரமானது. கடினமான தருணத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் பிராத்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
சைரஸ் மிஸ்திரி 1968-ம் ஆண்டு மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தார். கல்லூரி படிப்பை லண்டனில் முடித்தார். 1991-ம் ஆண்டு ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தில் இயக்குநராக பொறுப்பேற்றார். டாடா குழும இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்த இவரது தந்தை ஓய்வு பெற்றதை அடுத்து, 2006-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். ரத்தன் டாடா ஓய்வு பெற்றதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மிஸ்திரி நியமிக்கப்பட்டார். டாடா குடும்பத்தின் நேரடி வாரிசு இல்லாத ஒருவர் டாடா குழுமத்தில் தலைமைப் பொறுப்பேற்றது அதுவே முதல்முறை. ஆனால், 2016-ம் ஆண்டு அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.