Published : 05 Sep 2022 04:25 AM
Last Updated : 05 Sep 2022 04:25 AM
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். குறிப்பாக கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் தங்களது பொருளாதார தேவைக்காக குடும்பத்துடன் சென்று திருப்பூர், கோவை, பல்லடம், கரூர்போன்ற பகுதிகளில் ஜவுளி தொழில்களில் டெய்லராக பணியாற்றி வருகின்றனர். கரோனா பாதிப்புக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக கடத்தூர் ,அரூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக ஆயத்தஆடை நிறுவனங்கள் 50-க்கும் அதிகமாக உருவாகி விட்டன.
திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இயங்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் துணிகளை சட்டை, பேன்ட், இரவு உடைகள் மற்றும் ரெடிமேட் வகைகளை கமிஷன் அடிப்படையில் தைத்து அனுப்பும் பணியில் ஆயத்தஆடை நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
பெரும்பாலும் கிராமப்புறங் களைச் சார்ந்து அமைந்துள்ள இந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பெண்களாகவே உள்ளனர். தற்போது ஆயிரம் பேருக்கு மேல் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாத வருமானம் பெறும் ஒரு தொழிலாக பெண்களுக்கு இது கை கொடுத்து வருகிறது.
கிராமப்புற மக்களின் வாழ் வாதாரத்தை ஒரு வகையில் காக்கும் இந்த ஆயத்த ஆடைத் தொழிலை மேலும் பெருக்க, பெண்களுக்கு தையல் பயிற்சிகள் முக்கிய கிராமங்களில் அமைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் பட்சத்தில் மேலும் பலர் நிரந்தர வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள நிறுவனங் களில் தையல் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், இந்த பயிற்சி மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த கூலிவேலைக்குச் செல்லும் பெண்கள், மகளிர் குழுக்கள் மூலமாக தாங்களே சிறிய அளவில் ஆயத்த ஆடைத் தொழிலை நடத்தவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கடத்தூரைச் சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் ஜெயக்குமார் கூறுகையில், ஆயத்த ஆடை நிறுவனம் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் தேவைப்படும் நிலையில் புதியதாக வங்கிக் கடன் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும் பட்சத்தில் மேலும் பலர் ஆர்வமுடன் தொழிலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT