

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறோம். சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் இந்தியா முன்வரிசையில் இருக்கிறது. இந்திய சந்தையின் டிஜிட்டல் புரட்சியை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன.
கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ரூ.24.8 லட்சம் கோடிக்கு மேல் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 90 லட்சத்துக்கும் அதிகமாக நேரடி பயன் பரிமாற்றம் இருந்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.20,000 கோடி செலுத்தப்பட்டது.
கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் 8,840 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் ஜூலை 24-ம் தேதி வரை 3,300 கோடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளில் 28.4 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் 'வளரும்' நாடுகள் மட்டுமின்றி 'வளர்ந்த' நாடுகளும் இந்தியாவிடம் இருந்து கற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை சேர்ந்த பொருளாதார நிபுணரும் செய்தியாளருமான கிறிஸ்டியன் ஓடன்தால் கூறும்போது, “ஜெர்மனியில் மக்களுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் அரசு திணறிவருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே நடைபெறுகிறது" என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இதே நிலையே காணப்படுகிறது. இந்தியாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுவது ஐரோப்பிய நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.