

தேனி: ஓணம் பண்டிகை தேவையைக் கணக்கிட்டு தேனி மாவட்டத்தில் பரவலாக பூ சாகுபடி நடைபெறுகிறது. தற்போது கேரளா வியாபாரிகளின் கொள்முதலினால் பூக்களின் விலை வெகுவாய் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக எல்லையில் தேனி மாவட்டம் அமைந்திருப்பதால் கேரளாவுக்குத் தேவைப்படும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கிருந்து அதிகம் அனுப்பப்படுகின்றன. பூக்களைப் பொறுத்தவரையில் ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் இதன் தேவை மிக மிக அதிகம் இருக்கும் என்பதால் தேனி மாவட்டத்தில் இதை கணக்கிட்டு பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆண்டிபட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர், கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, துரைசாமிபுரம், சீலையம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூ நாற்றுக்கள் அதிகளவில் நடப்பட்டன. தற்போது இவை மகசூலுக்கு வந்துள்ளன. தினமும் இவை பறிக்கப்பட்டு ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன.
ஓணம் பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரள வியாபாரிகள் இங்கு பூ கொள்முதலை தொடங்கி உள்ளனர். இதனால் இதன் விலை கடந்த வாரத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1,500, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.500, செண்டுப்பூ ரூ.80, அரளிப்பூ ரூ.250, கோழிக்கொண்டை ரூ.80க்கு விற்பனை ஆனது.
இது குறித்து கோட்டூர் விவசாயி பால்சாமி கூறுகையில், "ஓணம் பண்டிகை நேரத்தில் மகசூலுக்கு வரும் வகையில் நடவு செய்திருந்தோம். விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் மகசூல் வெகுவாய் குறைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையினால் பூக்களில் தண்ணீர் கோர்த்து அழுகல் ஏற்பட்டுள்ளது. மேலும் செடியின் வளர்ச்சி பாதித்து, களைச்செடியும் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டது" என்றார்.
பாலார்பட்டி விவசாயி ஜீவா கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் பூவியாபாரிகளால் தற்போது விலை கூடியுள்ளது. இன்னும் 2 நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூக்களை கொய்தாலும் சிம்புகள் தளிர்த்து தினமும் பூ பூப்பதால் ஓணம் வரை மகசூல் நீடிக்கும்" என்றார்.