Published : 02 Sep 2022 03:40 AM
Last Updated : 02 Sep 2022 03:40 AM

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91 குறைப்பு - சென்னையில் ரூ.2,045-க்கு விற்பனை

சென்னை: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,885 ஆகவும், சென்னையில் 2,045 ஆகவும் குறைந்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதேபோல வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்தது.

இதனிடையே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, ஒரு சிலிண்டருக்கு நேற்று ரூ.91.50 குறைக்கப்பட்டது. இதேபோன்று விமான எரிபொருள் விலையும் ஆயிரம் லிட்டருக்கு ரூ.874.13 (0.7 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநில வரி விகிதங்களுக்கு ஏற்ப வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.1,976.50 ஆக இருந்தது. நேற்று விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து வணிக சிலிண்டரின் விலை ரூ.1,885 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் ரூ.2 ஆயிரத்து 141 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை, ரூ.96 குறைந்து, ரூ.2 ஆயிரத்து 45-க்கு விற்கப்பட்டது.

இருந்தபோதிலும், வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,068.50 ஆக நீடிக்கிறது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், சிலிண்டர் நிரப்புவதற்கு பதிவு செய்வதை குறைந்தது 15 நாட்களுக்கு பிறகு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையே, இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x