Published : 02 Sep 2022 06:40 AM
Last Updated : 02 Sep 2022 06:40 AM

குறைந்த செலவில் ஆயுள் காப்பீடு வழங்கி 66 ஆண்டாக நன்மதிப்பு, நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துள்ள எல்ஐசி

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நேற்று 67-ம் ஆண்டில் கால் பதித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு, நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. தற்போது 14 நாடுகளில் செயல்பட்டு வரும் எல்ஐசி குறைந்த செலவில் மக்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்கி வருகிறது.

1956-ம் ஆண்டு வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது ரூ.42,30,616 கோடி சொத்து மதிப்பை பெற்றுள்ளது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் ஈடுபட அனுமதி வழங்கி 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போதும் எல்ஐசி இத்துறையில் 63.25 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் 2.17 கோடி புதிய பாலிசிகளை விற்றுள்ளது. இது 7.92 சதவீத வளர்ச்சியாகும். இதே ஆண்டில் ரூ.1,92,563 கோடி அளவிலான 267.23 லட்சம் பாலிசிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 8 மண்டல அலுவலகங்கள், 113 பிரிவு அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் மண்டலம், 2,048 கிளை அலுவலகங்கள், 1,564 சாட்டிலைட் அலுவலகங்கள், 44,900 பிரீமியம் செலுத்தும் மையங்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், 13.26 லட்சம் முகவர்களை எல்ஐசி கொண்டுள்ளது. மேலும் 74 வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது.

33 வெவ்வேறு திட்டங்கள்

கடந்த மார்ச் 31-ம் தேதி கணக்கின்படி, என்டோமென்ட் இன்சூரன்ஸ், டெர்ம் இன்சூரன்ஸ், குழந்தைகளுக்கான இன்சூரன்ஸ், மைக்ரோ இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், பங்குச் சந்தையுடன் இணைந்த திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையிலான 33 வெவ்வேறு திட்டங்களை எல்ஐசி பெற்றுள்ளது. சமீபத்தில் பீமா ரத்னா, தன் சஞ்சய் ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

இந்த சேவைகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பென்ஷன் பாலிசிதாரர்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் இருப்புச் சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் ஜீவன் சாக் ஷ்ய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, வாடிக்கையாளர் சேவை, காப்பீடுத் தொகை வழங்கல், தொழில்நுட்பம், மின்னணு சந்தைப்படுத்தல் போன்றவற்றுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு விழாவின்போது, வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது மட்டுமின்றி “உங்கள் நலன் எங்கள் பொறுப்பு” என்ற கொள்கையுடன் தொடர்ந்து செயல்பட எல்ஐசி உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x