Published : 02 Sep 2022 04:00 AM
Last Updated : 02 Sep 2022 04:00 AM
இட்லி, தோசை மாவுக்கு அதிக தேவை உள்ள காரணத்தால் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கோவையிலிருந்து அதிக அளவு வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக உள்நாட்டில் விற்பனை குறைந்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் வெட்கிரைண்டர்கள், உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 600-க்கும் மேற்பட்டஎண்ணிக்கையில் உள்ளன. இவற்றின் மூலம் 30,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாடு முழுவதும் வெட்கிரைண்டர்கள் தேவையை கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.
1960-ம் ஆண்டு துவங்கி 1990 வரை பாரம்பரிய வகை ( சாய்க்க முடியாத) கிரைண்டர்கள் தான் தயாரிக்கப்பட்டன. 1991 ஆண்டு முதல் முறையாக ‘டேபிள் டாப்’ வகையான கிரைண்டர்கள் தயாரிக்கப்பட்டன. ‘டில்டிங்’ வகையிலான கிரைண்டர்களுக்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. காரணம் கிரைண்டரை சாய்த்துமாவை எளிதில் எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு பின் ‘வெர்டிக்கல்’ வகையான கிரைண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இருந்து மாவு தானாக பாத்திரங்களுக்கு வந்துவிடும். ஆனால் இந்த வகை கிரைண்டர்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கோவை மாவட்டத்தில் 2 லிட்டரில் தொடங்கி 100 லிட்டர்வரை பல வகைகளில் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்டசமாக ரூ.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
கோவையில் இருந்து சவுதிஅரேபியா, தோகா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட இந்தியர்கள் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல நாடுகளுக்கு விமான சேவைஇல்லாத காரணத்தால், பெரும்பாலும் கோவையிலிருந்து கொச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு சாலை வழியாக லாரிகளில் கிரைண்டர்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மொத்த ஏற்றுமதியில் 95% கப்பல்கள் மூலமாகவும் 5% விமானங்கள் மூலமும் செல்கின்றன.இந்நிலையில், உள்நாட்டில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக விற்பனை சரிந்துள்ளதாகவும், சலுகை காரணமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கவுமா) தலைவர் சவுந்தரகுமார் கூறும்போது,‘‘ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது வெட்கிரைண்டர்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம்வரி விதிக்கப்பட்டது. தொழில்முனை வோர் ஒன்றுபட்டு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 12 சதவீதமாக குறைக்கப்பட்டு, பின்னர் 5 சதவீதம் ஆனது. சமீபத்தில் மீண்டும்18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டில் கிரைண்டர்கள் விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி பட்டியலில் கிரைண்டர்களை சேர்க்க வேண்டும். இது குறித்து மத்திய, மாநில அமைச்சர்களை சந்திக்க உள்ளோம்” என்றார்.
வெட்கிரைண்டர் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் கூறும்போது, “இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குகிறது. தற்போது சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கிரைண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. கோவையிலிருந்து பல நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்கவும், கப்பல் போக்குவரத்தில் தற்போது அதிகரித்துள்ள சரக்கு போக்குவரத்து கட்டணத்தைகுறைக்கவும் போதிய எண்ணிக்கையில் கொள்கலன்கள் கிடைக்கவும் மத்திய அரசு உதவ வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT