Last Updated : 16 Oct, 2016 09:42 AM

 

Published : 16 Oct 2016 09:42 AM
Last Updated : 16 Oct 2016 09:42 AM

எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை கையகப்படுத்தியது ரஷியாவின் ரோஸ்நெப்ட்

இந்திய எண்ணெய் நிறுவனங்களில் இரண்டாவது மிகப் பெரிய தனியார் நிறுவனமான எஸ்ஸார் ஆயிலை ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் கையகப்படுத்தியுள்ளன. இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 1,300 கோடி டாலர்களாகும்.

எஸ்ஸார் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் நிலையங்களின் 49 சதவீதத்தை ரோஸ்நெப்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. மேலும் உலக அளவில் மிகப் பெரிய கமாடிட்டி வர்த்தக நிறுவனமான நெதர்லாந்தைச் சேர்ந்த டிராபிகுரா குழுமம் மற்றும் ரஷியாவின் யுனைடெட் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் 49 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளன.

மீதமுள்ள 2 சதவீத பங்குகள் சிறுபான்மை பங்குதாரர்கள் வசம் உள்ளன.

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை 1,300 கோடி டாலருக்கு முடிந்துள்ளது. இந்த பரிமாற்ற நடவடிக்கையில் எஸ்ஸார் குழுமத்தின் 405 கோடி டாலர் கடன் மற்றும் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிறுவனம், மின் உற்பத்தி ஆலைகளின் 200 கோடி டாலர் கடனும் அடங்கும்

மேலும் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் எண்ணெய் கொள்முதல் செய்த வகையில் இரானுக்கு கொடுக்க வேண்டிய 300 கோடி டாலரும் இந்த பரிமாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது.

எஸ்ஸார் ஆயில் நிறுவனம் தொழிலதிபர் ருயா சகோதரர்களுக்கு சொந்தமானது. உருக்கு மற்றும் துறைமுக தொழில்களிலும் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. குஜராத்தின் வாடிநார் ஆலையிலிருந்து தினசரி 4,05,000 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து வந்தது. இது தொடர்பாக பேசிய எஸ்ஸார் குழுமம் இரண்டு ஒப்பந்தங்களின் மூலம் இந்த விற்பனை நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

முதலாவது விற்பனை ஒப்பந்தம் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான போர்டல் காம்ப்ளெக்ஸ் நிறுவனம் எஸ்ஸார் ஆயிலின் 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தமாகும். இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் யுனைடெட் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் கேசனரி எண்டர்பிரைசஸ் 49 சதவீதத்தை ரூ.72,800 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தமாகும்.

மேலும் கூடுதலாக ரூ.13,300 கோடி கொடுத்து வாடிநார் துறைமுகம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு உலகத் தரம் வாய்ந்த ஏற்றுமதி இறக்குமதி வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் நிறுவனத்தின் கடன் நெருக்கடிகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. குழுமத்தின் ரூ.90,000 கோடி கடன் பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின், பிரதமர் நநேந்திர மோடி சந்திப்பின் போது இந்த இணைப்பு அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில், ஒரே நிறுவனத்திடமிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் 2017 முதல் காலாண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x