Last Updated : 29 Oct, 2016 11:19 AM

 

Published : 29 Oct 2016 11:19 AM
Last Updated : 29 Oct 2016 11:19 AM

ஜான்சன் & ஜான்சன் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.467 கோடி (7 கோடி டாலர்) இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபிபவுடர், புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று கலிபோர்னியாவை சேர்ந்த டெப்ரோஹ் கியானெச்சினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ. 467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு விதிக்கப்படும் 3-வது அபராதமாகும்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக மாகாண நீதிமன்றங்கள், பெடரல் நீதிமன்றங்களிலும் கிட்டத்தட்ட 1,700 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு வழக்குகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 7.2 கோடி டாலர் மற்றும் 5.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது மூன்றாவது வழக்காக கியானெச்சினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரே காரணம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இறப்பதற்கு 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கியானெச்சினி வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

கியானெச்சினிக்கு அபராதத் தொகையாக 6.5 கோடி டாலரும் மருத்துவச் செலவுக்காக 0.25 கோடி டாலரும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 0.25 கோடி டாலர் தொகையை இமேரிஸ் டாக் அமெரிக்கா நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை விநியோகம் செய்த நிறுவனமாகும்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். புற்றுநோய் ஏற்பட ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் காரணமல்ல என்றுஅந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x