

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரவை, கோதுமை, மைதா மாவு ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சனிக்கிழமை தடைவிதித்தது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அமைச்சரவை முடிவின்படி, ரவை, மைதா, கோதுமை மாவு மற்றும் ஹோல்மீல் ஆட்டா ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இவற்றின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. கடந்த மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில விதிவிலக்குகளின் அடிப்படையில் அரசின் முன் அனுமதி பெற்று இவற்றை ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் முன்னணி
கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள்முன்னணியில் உள்ளன. ஒட்டுமொத்த உலக கோதுமை வர்த்தகத்தில் நான்கில் ஒரு பகுதி இந்தநாடுகளின் பங்களிப்பாக உள்ளது. இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போரினால் உலக அளவில் கோதுமைக்கு அதிக தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கணிசமான அளவில் அதிகரித்து உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்துள்ளது.
உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவித்துள்ளது.
2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022 ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் இந்திய கோதுமை மாவுஏற்றுமதியின் அளவு 200 சதவீதம்அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.