எஸ்தானியாவின் ஜிடிபி-க்கு சமமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

எஸ்தானியாவின் ஜிடிபி-க்கு சமமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு
Updated on
1 min read

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 9-வது வருடமாக முதலிடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 2,270 கோடி டாலர்கள் ஆகும். இவரது சொத்து மதிப்புக்கு சமமாக எஸ்தானியாவின் (Estonia) ஜிடிபி இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேபோல இந்தியாவின் நான்காவது பெரிய பணக்கார ரான அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 1,500 கோடி டாலர்கள். மொசாம்பிக் நாட்டின் ஜிடிபி மதிப்பு 1,470 கோடி டாலர்கள் மட்டுமே. மொசாம்பிக் ஜிடிபி மதிப்பை விட சன் பார்மா நிறுவனர் திலிப் சாங்வி சொத்து மதிப்பு அதிகம். இவரின் சொத்து மதிப்பு 1,690 கோடி டாலர்கள். அதேபோல ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு 1,520 கோடி டாலர்கள் ஆகும். ஐந்தாவது இடத்தில் பலோன்ஜி மிஸ்திரி இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 1,390 கோடி டாலர்கள் என போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு 8,370 கோடி டாலர்கள். இதில் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போல 18 போட்டிகளை நடத்தி விடலாம். மங்கள்யான் திட்டத்துக்கு ஆகும் செலவை விட இவர்கள் ஐவரின் சொத்து மதிப்பு 1,230 மடங்கு அதிகம் என போர்ப்ஸ் கணித் திருக்கிறது.

இந்த பட்டியலில் உள்ள முதல் 100 நபர்களின் சொத்து 38,100 கோடி டாலர்கள் ஆகும். கடந்த வருடத்தை விட இப்போது 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் (முதல் 100) இடம்பிடிப்பவர்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு 100 கோடி டாலர் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 100-வது இடத்தில் இருந்தவரின் சொத்து மதிப்பு 110 கோடி டாலர். ஆனால் இந்த வருடம் 100-வது இடத்தில் இருப்பவரின் சொத்து மதிப்பு 125 கோடி டாலர்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இந்த பட்டிய லில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in