

தொழில்நுட்பம், வெளிப்படைத் தன்மையான நடவடிக்கை மற்றும் தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதன் மூலம் 8 சதவீத வளர்ச்சியை அடுத்த 20 வருடங்களுக்கு சாத்தியப்படுத்த முடியும் என மத்திய வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலக பொருளா தார மையம் (டபிள்யூஇஎப்) இணைந்து புதுடெல்லியில் நடத்திய மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறிய தாவது: எட்டு சதவீத வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. இரு அரசுகளும் உறுதியுடன் செயல்படும்போது எட்டு சதவீதம் சாத்தியமாகும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அரசியல் ரீதியாகவும் பயனுள்ளதாக இருகிறது.
தற்போது இருக்கும் தடைகளை நீக்கி, தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்தி, தொழில்நுட்ப உதவியுடன் அடுத்த கட்டத்துக்கு செல்வதன் மூலம் எட்டு சதவீத வளர்ச்சி சாத்தியம்.
சரக்கு மற்றும் சேவை வரி, ஜேஏஎம் (ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல்) மற்றும் தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்தி முதலீடுகளை திரட்டுவது உள்ளிட்ட மூன்று விஷயங்களில் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் உதவி யுடன் ஊழலை ஒழித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதில் மாநில அரசுகளையும் இணைக்க வேண்டும். இரு அரசுகளும் இணையும் போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். அடுத்த சில மாதங்களுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து பணிபுரிந்து தடைகளை நீக்குவதில் எங்களின் கவனம் இருக்கும்.
அந்நிய முதலீடு வந்துகொண்டிருக்கிறது. இந்த முதலீடுகளை பயனுள்ளதாகவும், இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு இந்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச வளர்ச்சிக்கு தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.