Published : 28 Aug 2022 05:56 AM
Last Updated : 28 Aug 2022 05:56 AM

நவீன மோசடிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் மேம்பட வேண்டும் - தணிக்கைத் துறை அதிகாரிகள் கருத்து

நிறுவனங்களின் மதிப்பைப் பாதுகாப்பதில் தணிக்கையாளர்களின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் (ஐஐஏ)சென்னைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறு, நடுத்தர நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆரம்ப நிலையில் கண்டறிய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ‘மோசடி உள்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் தடுத்தலும் கண்டறிதலும்’ நூல் வெளியிடப்பட்டது. படம்: பு.க.பிரவீன்

சென்னை: நிறுவனங்களின் மதிப்பைப் பாதுகாப்பதில் தணிக்கையாளர்களின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் (ஐஐஏ) சென்னைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை ஐஐஏ சென்னைப் பிரிவின் தலைவர் ரவி வீரராகவன் தொடங்கிவைத்தார்.

நிறுவன மோசடிகளின் பரிணாமம் குறித்தும் அவற்றைக் கண்டறியும் வழிமுறை குறித்தும் தணிக்கைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேசினர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்றும் நவீன மோசடிகளை ஆரம்பநிலையிலேயே கண்டறியும் வகையில் உள்தணிக்கைத் துறை மேம்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இஒய் நிறுவனத்தைச் சேர்ந்தமூத்த அதிகாரி சந்திப் பல்தவா பேசுகையில், “முன்பு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை தணிக்கையின்போது எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆனால், தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்பமோசடிகள் பரிணாமம் அடைந்துள்ளன. நாம் நினைத்திராத வகைகளில் நிறுவனங்களில் மோசடிகள் நடைபெறுகின்றன.

இவற்றை ஆரம்ப நிலையிலேதுல்லியமாக அடையாளம் காணவேண்டுமெனில் கால மாற்றத்துக்கு ஏற்ப, உள்தணிக்கையாளர்கள் தணிக்கை குறித்த தங்கள்அணுகுமுறையை விரிவாக்க வேண்டியது அவசியமாகும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஆதித்யா பட், “தற்போது மோசடிகள் மீதான வரையறை மாறி இருக்கிறது. மோசடிகளை மோசடி இல்லை என்று நிறுவும் போக்குஅதிகரித்து இருக்கிறது. அதேபோல் மோசடியற்ற ஒன்றை மோசடி என்று சித்தரிப்பதும் நிகழ்கிறது. உள்தணிக்கையாளர்கள் இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்கவேண்டும். தாங்கள் கண்டறியும் மோசடிகளை உடனடியாக தெரியப்படுத்துவது அவசியம்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ‘மோசடி: உள்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் தடுத்தலும் கண்டறிதலும்’ (Fraud: Prevention and detection thorough internal controls) நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை வித்யாதரன், சனா பகாய், நாவல் கிஷோர் பஜாஜ் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்நூல் குறித்து வித்யாதரன் பேசுகையில், "ஒரு நிறுவனம் வெற்றிகரமாக பயணிக்க வேண்டும் என்றால், அது சிறந்த உள்கட்டுப்பாடு அமைப்பை கொண்டிருக்க வேண்டும். உள்கட்டுப்பாடு அமைப்பானது மோசடியை கண்டறிவதோடு மட்டுமில்லாமல், மோசடி நடைபெறாமல் தடுக்கவும் செய்யும். இந்நூல் சிறு, நடுத்தர நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் மோசடி நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x