

பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சய் பவேஜா ராஜினாமா செய்திருக்கிறார். பிளிப்கார்ட் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறி வரும் சூழலில் சஞ்சய் பவேஜாவும் வெளியேறி இருக்கிறார். இருந் தாலும் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த பதவியில் தொடருவார் என்றும், புதிய தலைமை நிதி அதிகாரியை நியமனம் செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு வருடங்களுக்கு முன்பு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் அங்கிருந்து வெளியேறி பிளிப்கார்ட் நிறுவனத்தில் இணைந்தார். வர்த்தக பிரிவு தலைவர் முகேஷ் பன்சால், தலைமை தொழில் அலுவலர் அங்கித் நகோரி ஆகியோர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தலைமை புராடக்ட் அலுவலர் புனித் சோனி வெளியேறினார். தவிர மணீஷ் மகேஷ்வரி, சுனில் கோபிநாத் மற்றும் லலித் சர்னா ஆகிய முக்கிய அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத் தக்கது.