

தமிழகத்தில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வந்தது.
தற்போது, ரப்பர் விவசாயத்தில் அதிக லாபம் கிடைப்பதால், அங்குள்ள விவசாயிகள் தென்னை விவசாயத்தை கைவிட்டு ரப்பர் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளாவில் தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டதால், கொப்பரை உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில், கேரளாவைப்போல தமிழகத்திலும் நீரா இறக்குமதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனவிவசாயிகள் பல ஆண்டுகளாக போராடிவந்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு 1,000விவசாயிகளை கொண்ட உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கியவர்களுக்கு மட்டும் தென்னையில் இருந்து நீரா இறக்கிக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது. அந்த வகையில் தமிழகத்தில் 12 நிறுவனங்களுக்கு மட்டுமேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீரா விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்காக வேளாண் அதிகாரிகள் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், நீராவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்வது குறித்தும், நீரா பானம் கெடாமல் பாதுகாப்பது, சந்தைப்படுத்துவது குறித்தும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நா.பெரியசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதுவரை பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், தொடங்கிய வேகத்திலேயே அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.
குளிரூட்டப்பட்ட நிலையங்கள் அமைக்காதது, பாட்லிங் யூனிட்,சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல் இல்லாதது, கடனுதவி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீரா உற்பத்தி கைவிடப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளும், தென்னை வளர்ச்சி வாரியமும் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. நீரா பானம் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி, விவசாயிகளே நீராவை இறக்கிக்கொள்ளவும், விற்கவும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர்உத்தரவிட வேண்டும்.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல லட்சம்தென்னை விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.