

தொழிலதிபர் ஆதி கோத்ரெஜின் மனைவியும் மிகச் சிறந்த கொடையாளியுமான பரமேஷ்வர் கோத்ரெஜ் நேற்று முன்தினம் இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 70. நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பரமேஷ்வர் கோத்ரெஜ் பல சமூக செயல்பாடுகளுக்கு நிதி உதவிகளை அளித்த கொடையாளியாகவும் திகழ்ந்தவர். இவர் பல திறமைகளை கொண்டிருந்தார். ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே- வுடன் இணைந்து மிகப் பெரிய அளவிலான நிதி உதவியை அளித்துள்ளார். பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கிளின்டன் குளோபல் அமைப்புடன் இணைந்து எய்ட்ஸ்க்கு எதிராக நிகழ்ச்சியை 2014 ம் ஆண்டு நடத்தியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்ணாக இருந்தவர், பாலிவுட் நடிகை ஹேமமாலினி மற்றும் பாலிவுட் நடிகரும் இயக்குநருமான பெரோஸ் கான் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
தொழிலதிபர் ஆதி கோத்ரெஜை 1965-ல் திருமணம் புரிந்தார். இவரது மகள் நிசா கோத்ரெஜ் தற்போது கோத்ரெஜ் குழும பொறுப்பில் உள்ளார். மகன் தான்யா துபாஷ் மற்றும் பிரோஜ்ஷா என இருவரும் நிறுவன செயல்பாடுகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். பரமேஷ்வர் கோத்ரெஜ் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.