

கடந்த வாரம் மாருதி சுசுகி ஆல்டோ கே10 - 2022 மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த காரை சுமார் 2000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த கார்.
இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆல்டோ காரை மாருதி அறிமுகம் செய்தது. இதுவரையில் இந்த மாடலில் சுமார் 43 லட்சம் யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளதாக ‘ஆல்டோ கே10 - 2022’ அறிமுகத்தின் போது மாருதி தெரிவித்தது.
இந்த புதிய மாடல் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.99 லட்சத்தில் இருந்து ரூ.5.83 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு வேரியண்ட்டுகளில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விலை அதிகமுள்ள காரான AMT வேரியண்ட் 34 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். VXi+, VXi வேரியண்ட் தலா 28 சதவீதமும், LXi வேரியண்ட் 8 சதவீதமும், பேஸிக் வேரியண்ட் 2 சதவீதமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
கடந்த முறை ஆண்டுக்கு 75 முதல் 80 ஆயிரம் ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் என்ட்ரி லெவல் மினிகார்களின் மீதான மோகம் குறைந்தாலும் ஆல்டோ கார்களின் மவுசு குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.