

புதுடெல்லி: தலைநகர் டெல்லி NCR பகுதியில் வெகு விரைவில் 5ஜி சேவையை தங்கள் நிறுவன பயனர்கள் பெறலாம் என தெரிவித்துள்ளது வோடபோன் - ஐடியா (Vi). இதனை அந்நிறுவனம் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளதாக தகவல்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த ஏலத்தில் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும் அலைக்கற்றையை வாங்கியதாக தெரிகிறது.
இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், வெகு விரைவில் தலைநகர் டெல்லியில் 5ஜி சேவையை தங்கள் நிறுவன பயனர்கள் பெறலாம் என வோடபோன் - ஐடியா தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக உள்ள வோடபோன் - ஐடியா இதற்காக நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது.
“நல்ல செய்தி உங்களுக்கு! Vi நெட்வொர்க் 5G-க்கு மேம்படுத்தப்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறந்ததாக இருக்கும். விரைவில் Vi நெட்வொர்க் மூலம் டெல்லி NCR-இல் சிறந்த கவரேஜ் மற்றும் அதிவேக இணைய சேவையை அனுபவிப்பீர்கள்” என அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளது.
இருந்தாலும் எப்போது அது வெளியாகும் என்ற தேதி குறித்த விவரம் ஏதும் அதில் தெரிவிக்கப்படவில்லை. சர்வ காலமும் இணையத்தை பயன்படுத்தி வரும் நெட்டிசன்கள் 5ஜி சேவையை பயன்படுத்த ஆவலுடன் காத்துள்ளனர்.