Last Updated : 24 Aug, 2022 04:47 AM

 

Published : 24 Aug 2022 04:47 AM
Last Updated : 24 Aug 2022 04:47 AM

5 தென் மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை - குழப்பம், போட்டியை தவிர்க்க உரிமையாளர்கள் நடவடிக்கை

சென்னை: தங்கம் விலை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பம், விற்பனை போட்டியை தவிர்க்கும் வகையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

அழகூட்டும் ஆபரண நகைகளாக மட்டுமின்றி, அவசர தேவைக்கு அடமானம் வைத்துபணம் பெறுவது, முதலீடு செய்வது என பலவிதத்திலும் தங்கம் பயன்படுவதால், இதைமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் சராசரியாக ஓராண்டில் 1,300 டன் தங்கம்விற்பனையாகிறது. இதில் 30 சதவீத தங்கம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனைத்து விதத்திலும் பயன்படும் தங்கத்தின் விலை ஒரே சீராக இருப்பது இல்லை. தினமும் ஏறி, இறங்குகிறது. அத்துடன், அனைத்து கடைகளிலும் ஒரே விலையாக இருப்பது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கத்தை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தினமும் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

கார்ப்பரேட் நிறுவனங்களின் நகைக் கடைகளில் ஒரு விலைக்கும், ஆன்லைன் விற்பனையில் வேறு விலைக்குமாக தங்கம் விற்பனையாகிறது. அத்துடன், ஒவ்வொரு கடைக்கும் விலை வித்தியாசப்படுகிறது.இதனால், தங்க நகை விற்பனையில் தேவையற்ற போட்டி ஏற்படுகிறது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கும் தங்கத்தின் விலை தொடர்பாக குழப்பம், சந்தேகம் ஏற்படுகிறது. எந்த கடையில் சரியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்வியும், சந்தேகமும் எழுகிறது.

தமிழகம் முழுவதும் சிறியது, பெரியது என மொத்தம் 35 ஆயிரம் தங்க நகைக் கடைகள் உள்ளன. நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்வதற்கான முயற்சியை எங்கள் சங்கம் முன்னெடுத்தது. இதற்காக, கேரள மாநிலம் கொச்சியில் ஒரு கூட்டத்தைக் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில், தென் மாநிலங்களை சேர்ந்த நகைக் கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக, தென்னிந்தியா முழுவதும் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்ய இக்கூட்டத்தில் தீர்மானித்தோம். ஆரம்பத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒரே விலையில் தங்கம் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளோம்.

இதேபோல, சேதாரம், விலையில் தள்ளுபடி ஆகியவற்றையும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x