

குறுகிய கால கடனுக்கான (ரெபோ விகிதம்) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி. முன்பு 6.5 சதவீதமாக இருந்த ரெபோ விகிதத்தை இப்போது 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு மிக குறைந்த ரெபோ விகிதம் இதுவாகும்.
குறுகிய கால கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் வங்களில் வீட்டுகடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த வட்டி குறைப்பின் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக வழங்குமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 2015 ஜனவரியில் இருந்து ரிசர்வ் வங்கி 1.5 சதவீதம் அளவுக்கு ரெபோ விகிதத்தை குறைத்திருக்கிறது. ஆனால் வங்கி கள் 0.5 சதவீதம் அளவுக்கு மட்டுமே வட்டியை குறைத்திருக்கின்றன.
உர்ஜித் படேல் செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து நிதிக்கொள்கை குழு அமைக்கப்பட்டது. நிதிக்கொள்கை குழு மூலம் அறிவிக்கப்பட்ட முதல் நிதிக்கொள்கை இதுவாகும். அனைத்து உறுப்பினர்களும் 0.25 சதவீத வட்டி குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதம் 5.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
நிதிக்கொள்கை குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை கூடி விவாதித்தனர். என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பது குறித்து அடுத்த இரு வாரங்களில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லரை பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5.05 சதவீதமாகக் குறைந்தது. வட்டி குறைப்பு செய்வதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்திருப்பதால் சந்தையில் பணப்புழக்கம் உயரும். மேலும் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு இந்த வட்டி குறைப்பு பயனுள்ளதாக இருக்கும் என நிதிச்செயலாளர் அசோக் லவாசா குறிப்பிட்டுள்ளார். அர்விந்த் பனகாரியா கூறும்போது, இது வரவேற்கத்தகுந்த முடிவு. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்த ஆட்டோ மொபைல் துறைக்கும் இந்த வட்டி குறைப்பு சாதகமாக இருக்கும் என மாருதி சுசூகியின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராகேஷ் வஸ்தவா கூறும்போது, விழாக் காலத்தில் ரிசர்வ் வங்கி பரிசளித்திருக்கிறது. இந்த வட்டி குறைப்பு சந்தையில் பல சாதகமான தொடர் விளைவுகளை உண்டாக்கும் என்றார்.
இன்னும் 0.75 சதவீதம் வட்டி குறைப்புக்கு வாய்ப்புகள் இருப்பதாக யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ராணா கபூர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி 18%
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் நுகர்வோர் பணவீக்கத்தில் எந்தவித மான பாதிப்பும் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த அளவுக்கு வரி இருக்கும் போது 0.3 முதல் 0.7 சதவீதம் அளவுக்கு பணவீக்கம் உயரும் என்று குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.