உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக உயர்வு

உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக உயர்வு
Updated on
1 min read

இதுவரை சிறிது சிறிதாகக் குறைந்து வந்த உணவுப் பணவீக்கம் இப்போது 9.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவாக மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பழங்களின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஒட்டுமொத்த சில்லறைக் குறியீட்டெண் அடிப்படையில் உணவுப் பொருள்களின் விலை மார்ச் மாதத்தில் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் இது 8.12 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 4.68 சதவீதமாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை அரசு வெளியிட்ட அட்டவணை அடிப்படையில் (திருத்திய மதிப்பீடு) ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 5.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னர் 5.05 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது.

மார்ச் மாதத்தில் உருளைக் கிழங்கு விலை 27.83 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் இது 8.36 சதவீத உயர்வையே சந்தித்திருந்தது. வெங்காயத்தின் விலை 1.92 சதவீதம் உயர்ந்திருந்தது. ஒட்டுமொத்தமாக காய்கறிகளின் விலை 8.57 சதவீதம் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது 4 சதவீத உயர்வாக இருந்தது. பழங்களின் விலை 16.15 சதவீதம் உயர்ந்திருந்தது. பிப்ரவரி மாதத்தில் இது 9.92 சதவீதமே அதிகமாக இருந்தது.

2013-14-ம் நிதி ஆண்டில் பணவீக்கம் 5.70 சதவீதமாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. முன்னர் இது 5.65 சதவீதமாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

சர்க்கரை, பருப்பு, சிமென்ட், கனிமங்கள் ஆகியவற்றின் விலை மார்ச் மாதத்தில் சற்று குறைந்திருந்ததாக அரசு வெளியிட்ட அட்டவணை தெரிவிக்கிறது.

எரிபொருள் (எல்பிஜி, பெட்ரோல், டீசல்) விலை 11.22 சதவீதம் உயர்ந்தது. முந்தைய மாதத்தில் இது 8.75 சதவீத அளவுக்கே உயர்ந்திருந்தது.

புதிய அரசின் சவால்

உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது புதிய அரசுக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். விலை உயர்வுக்கு உணவுப் பொருள் சப்ளையில் நிலவும் இடர்பாடுகளைக்களைய வேண்டும்.

இதுதான் புதிய அரசின் முன்னுள்ள பிரதானமான சவாலாக இருக்கும் என்று ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா குறிப்பிட்டார். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாதவரையில் வளர்ச்சி சாத்தியமாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in