

புதுடெல்லி: எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் Audi கார்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட உள்ளதாக ஜெர்மனி நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து மாடலுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட நிறுவனம்தான் Audi. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம். சுமார் 10 நாடுகளில் 13 உற்பத்தி கூடங்கள் மூலம் கார்களை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். பாதுகாப்பு அம்சங்கள் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக இந்த கார் விரும்பப்படுகிறது.
மகிழுந்தில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்த காரை தங்களது முதல் சாய்ஸாக கொண்டுள்ளார்கள். அதன் காரணமாக சுமார் 110 நாடுகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2004 முதல் இந்திய சந்தையில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2007 முதல் பிரத்யேக விற்பனை மையத்தை இந்தியாவில் நிறுவி, அதன் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொகுசு கார்களின் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிறுவனத்தின் இலக்கு. A4, A6, Q5, Q7 போன்ற கார்களில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.
A7, A8, Q3, Q5, TT, RS5, RS7, R8, E-tron, E-tron GT/RS E-tron GT போன்ற மாடல்கள் இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக Audi இந்தியா அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் உதிரி பாகங்களின் விலை, உற்பத்தி செலவு மற்றும் விநியோக சங்கிலி ஏற்றம் கண்டது போன்றவை இந்த விலை உயர்விற்கு காரணம் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாடல் கார்களின் விலையும் அதிகபட்சம் 2.4 சதவீதம் வரை உயர உள்ளதாம்.
அதன்படி மலிவு விலை கார்களின் விலையில் 90 ஆயிரம் ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த கார்களில் 5 லட்சம் ரூபாய் வரையிலும் ஏற்றம் காண உள்ளதாக தெரிகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.