Published : 25 Oct 2016 10:34 AM
Last Updated : 25 Oct 2016 10:34 AM

தொழில் முன்னோடிகள்: கிங் காம்ப் ஜில்லெட் (1855 - 1932)

சொன்னபடி செய்யத் தெரியாதவர்களும், சொன்னதற்கும் அதிகமாக செய்யத் தெரியாதவர்களும் உதவாக்கரைகள்.

-கிங் காம்ப் ஜில்லெட்

“வானவில்லின் கீழ் இருக்கும் தங்கத்தைத் தேடி அலையும் கனவுஜீவி நான்” என்று தன்னை வர்ணித்துக்கொண்டார், கிங் காம்ப் ஜில்லெட். உலகம் முழுக்கப் பிரபலமான ஜில்லெட் ரேசர்கள், பிளேடுகள் தயாரிக்கும் ஜில்லெட் நிறுவனம் தொடங்கி கோடீஸ்வரரானவர். 48 வயதுவரை இயந்திரத்தனமான வாழ்க்கை, விரக்தி, ராக்கெட் வேக வளர்ச்சி, நண்பர்களின் துரோகம், சறுக்கல் என ஜில்லெட் வாழ்க்கை த்ரில்லான பரமபதம்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் நகரில் ஜார்ஜ் கில்லெட் வசித்தார். போஸ்ட் மாஸ்டர், நாளிதழ் ஆசிரியர், கண்டுபிடிப்பாளர் என இவருக்குப் பல முகங்கள். ஆனால், ஒன்றிலும் பெரும் வெற்றி காணவில்லை. ஜார்ஜூக்கு மூன்று மகன்கள். கிங்கின் நான்காம் வயதில் சிகாகோ நகரம் வந்தார். ஹார்ட்வேர் கடை தொடங்கினார். சுமாராக நடந்துகொண்டிருந்தது. 12 வருடங்கள் ஓடின. சிகாகோ நகரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஜார்ஜின் ஹார்ட்வேர் கடை சாம்பலானது. பிழைப்புத் தேடிக் குடும்பம் நியூயார்க் நகரத்துக்குப் புலம் பெயர்ந்தது.

ஜார்ஜ் காப்புரிமை ஏஜென்டாகத் தொழில் தொடங்கினார். தினமும், குடும்பத்தினரிடம், காப்புரிமைக்காகத் தன்னைத் தொடர்பு கொண்டவர்களையும், அவர்களின் கண்டுபிடிப்புச் சாமான்களையும் பற்றிச் சொல்லுவார். இதனால், கண்டுபிடிப்புகளின் மேல் ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் ஈடுபாடு வந்தது. அப்பாவும், மகன்களும், வீட்டில் மெக்கானிக்கல் கருவிகளை நோண்டிக்கொண்டேயிருப்பார்கள். அம்மா மட்டும் சோடை போவாரா? விதவிதமான உணவுகள் சமைப்பார். சமையல் குறிப்புக்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதிவைப்பார்.

கிங் பதினேழாம் வயதில் படிப்பை விட்டார். ஒரு ஹார்ட்வேர் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், மனம் கண்டுபிடிப்புகளிலேயே இருந்தது. வேலை முடிந்து வந்தவுடன், “ஆராய்ச்சிகள்” செய்வார். 24 வயதில் நான்கு காப்புரிமைகள். வீட்டுக் குடிதண்ணீர் குழாய்களில் பயன்படும் வால்வ் நல்லபடியாக விற்பனையாகும் என்று நினைத்தார். வேலையில் இருந்தபடியே, வால்வுகளைத் தயாரித்து விற்கும் நிறுவனம் தொடங்கினார். அப்போது அவருக்குப் புரிந்தது, “கண்டுபிடிப்புத் திறமை மட்டும் போதாது. அதை மக்களிடம் கொண்டுசேர்க்க விளம்பரம், விநியோகம், இவற்றுக்கான முதலீடு, தொழிலில் முழுக் கவனம் ஆகியவை தேவை.” அவரிடம் இவை எதுவுமே இல்லை. ஆகவே, வேலையில் தொடர்ந்தார்.

கிங் வயது 32. அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையின் சமையல்காரப் பெண்மணி தற்செயலாக கிங்கின் அம்மாவின் சமையல் குறிப்புகளைப் பார்த்து அசந்துபோனார். தன் கைவண்ணங்களைச் சேர்த்து மெருகு கூட்டினார். வெள்ளைமாளிகை சமையல் புத்தகம் (White House Cookbook) என்னும் தலைப்பில் வெளியான புத்தகம் மாபெரும் வரவேற்பு பெற்றது. அம்மாவின் வெற்றியில் கிங்குக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம், தன் வாழ்க்கையில் வெளிச்சத்தையே பார்க்க முடியவில்லையே என்று விரக்தி.

தொடர் தோல்விகளைச் சந்தித்து, எதிர்காலத்தில் நம்பிக்கை இழக்கும் புத்திசாலி புரட்சிக்காரனாகிவிடுவான். பணம் படைத்த முதலாளிகளும், தொழில் போட்டிகளும் தன்னைப்போன்ற திறமைசாலிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கிங் நினைத்தார். உலகத்தில் முதலாளித்துவத்தையும், எல்லாத் தொழில் நிறுவனங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். கூட்டுறவு முறையில் உலகளாவிய நிறுவனம் அமைக்கவேண்டும் என்பது கிங் கொள்கையாயிற்று. இந்தக் கருத்துகளை விளக்கும் மனிதகுலச் சறுக்கல் (The Human Drift) என்னும் புத்தகம் எழுதினார். ஆயிரக்கணக்கானோர் கிங் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள். புகழ் வந்தது. ஆனால், பணம் வரவில்லை.

இப்போது அவருக்குள் இரண்டு மனங்கள் முதலாளித்துவத்தை ஒழிக்கும் போராளி ஒருவர், தானே அவர்களுள் ஒருவராக ஆசைப்பட்ட தொழில் முனைவோர் இன்னொருவர். கிங் வேலை பார்த்த நிறுவனத்தின் குளிர்பானங்கள், மதுவகைகள் ஆகியவற்றுக்கான கார்க் அடைப்பான்கள் தயாரித்தார்கள். இதைக் கண்டுபிடித்த கம்பெனி முதலாளி வில்லியம் பெயின்ட்டருக்குக் கிங் முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. அவர் தந்த அறிவுரை ``நீ ஒரு கண்டுபிடிப்பாளன். மக்கள் ஒருமுறை உபயோகப்படுத்தியவுடன், அதைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை வாங்கும்படியான பொருளைக் கண்டுபிடி.”

கிங் தன் மூளையைக் கசக்கிக்கொண்டார். கார்க் அடைப்பான், பேப்பர் கப்கள் போன்ற இத்தகைய பொருட்களை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டார்கள். ஒன்றுமே பாக்கி இல்லையே?

அந்த நாட்களில் முகச்சவரம் செய்யக் கத்திகள் பயன்படுத்தினார்கள். ஒரு கத்தி வாங்கினால், வாழ்நாள் முழுக்க வைத்துக்கொள்வார்கள். அது மொண்ணையாகும்போது, சிகைக் கலைஞர்களிடம் கொடுத்துச் சாணை தீட்டிக்கொள்வார்கள். இந்தக் கத்திகளைப் பயன்படுத்தும்போது, முகத்தில் சர்வசாதாரணமாக வெட்டுக் காயங்கள் வரும். இதனால், வீட்டில் சவரம் செய்துகொள்வதைப் பலரும் தவிர்த்தார்கள் அல்லது வாரம் ஒருமுறைதான் செய்துகொண்டார்கள்.

கிங் பணி நிமித்தமாக அடிக்கடி ரெயில் பயணம் போவார். கஸ்டமர்களை “பளிச்” தோற்றத்தோடு போய்ப் பார்க்கவேண்டாமா? சவரக் கத்தியை எடுத்தார். ஷேவ் செய்துகொள்ளத் தொடங்கினார். கத்தி கூர்மையாக இல்லை. முடி போகவில்லை. ரெயில் ஆட்டத்தில் முகத்தில் ரத்தம் கொப்பளித்த வெட்டுக்களே மிஞ்சின.

கிங் மனதில் வெட்டியது மின்னல். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் சவரக் கத்தியை உருவாக்கினால்…..மும்முரமாக முயற்சிகள் தொடங்கினார். அடிக்கடி எளிதில் மாற்றக்கூடிய கூர்மையான மெல்லிய தகடுகள் பொருத்தும் ரேசரை வடிவமைத்தார். பிளேடுகள் என்னும் கூர்தகடுகளுக்கு யானை விலை, குதிரை விலை. மலிவுவிலையில் அவற்றைத் தயாரிக்க முடிந்தால் மட்டுமே சவரப் புரட்சி சக்ஸஸ். உலோகவியல் துறையின் மாபெரும் பேராசிரியர்களைக் கிங் அடிக்கடி சந்தித்தார். முடியாது என்று எல்லோரும் கை விரித்தார்கள்.

கிங் நம்பிக்கை இழக்கவில்லை. வில்லியம் நிக்கர்ஸன் என்னும் பிரபல உலோகவியல் நிபுணரைச் சந்தித்தார். தன் ரேசரைக் காட்டினார். “பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் இந்த முயற்சியைக் கைவிடுங்கள்’’ என்று நிக்கர்ஸன் அறிவுரை சொன்னார். ஒரு பொது நண்பரின் சிபாரிசால், கிங்குக்கு உதவச் சம்மதித்தார். பதிலாக, நிக்கர்ஸனுக்கும், நண்பருக்கும் கிங் தொழிலில் பங்குகள் தந்தார்.

ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. வருமானமே இல்லாததால், கிங் தன் விற்பனையாளர் வேலையில் தொடரவேண்டிய கட்டாயம். மூவருக்கும் சேமிப்பு முழுக்கக் கரைந்தது. இன்னொரு நண்பர் கடன் தந்தார். பதிலாக, அவரும் தொழிலில் பங்காளியானார். பரிசோதனைகள், பரிசோதனைகள், தொடர் தோல்விகள். ஏழாம் வருடம். பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளேடுகள் கொண்ட ரேசர் பிறந்தது. 1903. தயாரிப்பு தொடங்கியது. 48 ஆம் வயதில், வாழ்க்கையில் சின்ன ஒளிக்கீற்று. முதல் வருட விற்பனை 51 ரேசர்கள், 168 பிளேட்கள்.

கிங் மார்க்கெட்டிங்கில் கில்லாடி. பாக்கெட்களில் தன் போட்டோவைப் போட்டார். பத்திரிகைகளில் விளம்பரங்கள். ரேசர்களை இலவசமாகக் கொடுத்தால், பிளேடுகளைக் கட்டாயம் வாங்கியாகவேண்டும் என்பது அவர் மார்க்கெட்டிங் யுக்தி. ஜில்லெட் வளர்ச்சிக்கு இது பலமான அஸ்திவாரம் அமைக்கும் என்று நம்பினார். ஆகவே, ரேசர்களை அமெரிக்கா முழுக்க இலவசமாக வாரி இறைத்தார். ஒரே வருடத்தில் விற்பனை 90,000 ரேசர்கள், 2 லட்சம் பிளேடுகள் என்று எகிறியது. இதற்குப் பிறகு பிசினஸ் ஏறுமுகம்தான்.

விற்பனை வந்த அளவு லாபம் வரவில்லை. விளம்பரச் செலவுகள், இலவச விநியோகம், தன் முகத்தைப் பிரபலப்படுத்துவது போன்ற கிங் செயல்பாடுகள் நிறுவனத்தின் சரிவுக்கு அடிகோலுவதாகப் பங்காளிகள் நினைத்தார்கள். அவர் கையிலிருந்து அதிகாரத்தைப் பறித்து, வெறும் அலங்கார பொம்மையாக்கினார்கள். மனம் உடைந்துபோனார்.

சோகங்கள் தொடர்ந்தன. 1929 இல் அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. தன் சொத்துக்களின் பெரும்பகுதியைக் கிங் இழந்தார். அடுத்த மூன்றே ஆண்டுகளில், தன் 77 ஆம் வயதில் மரணமடைந்தார். மாபெரும் வெற்றிகளைச் சுவைத்த பிறகும், வாழ்க்கை ஏகதேசம் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டதே என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையோ?

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x