

இன்றைக்கு சில்லரை வணிகத்தில் இருக்கும் போட்டியில் கடுகளவுகூட நம் நாடு சுதந்திரமடைந்த சமயத்தில் இருந்ததில்லை. இந்திய சில்லரை வணிகத்தின் மதிப்பு இன்றைக்கு ரூ.72 லட்சம் கோடியாகும். இந்தத் துறையில் ‘அண்ணாச்சிக் கடைகள்’, ‘கிராணா' (kirana), ‘மாம் & பாப்' (mom & pop) என பல பெயர்களில் அழைக்கப்படும் பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும், மாடர்ன் ரீடெயில் என அறியப்படுகிற சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விற்பனை செய்யும் ஆன்லைன் கடைகளும் அடங்கும்.
சில்லரை வணிகத்தில் 80 சதவீத விற்பனை பலசரக்குக் கடைகள் மூலமும், 15 சதவீதம் சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமும் மீதமுள்ள 5 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் ஆன்லைன் மூலமான வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது.
ஹோம் டெலிவரி: மாடர்ன் ரீடெயிலும், ஆன்லைன் வர்த்தகமும் கரோனாவுக்குப் பிறகு பெரும் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், இந்தப் போட்டிச் சூழலில் தாக்குப்பிடிக்க பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும் ‘ஹோம் டெலிவரி’ சேவையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதில் சுவராசியம் என்னவெனில், ஆன்லைன் வர்த்தகத் தளங்களும் தங்களின் விநியோக மேம்பாட்டுக்காக பலசரக்குக் கடைகளுடன் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.
இந்த மாதிரியான ஒரு கூட்டுறவு பல ‘ஹைப்பர்லோக்கல்’ சில்லரை வர்த்தகர்கள் உருவாக வழிவகுத்திருக்கிறது. இதில் டன்சோ, சுவிக்கி, சொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
சில்லரை வணிகத்தின் எதிர்காலம்: மத்திய அரசு சில்லரை வணிகத் துறையில் லட்சக்கணக்கான சிறிய உள்ளூர் கடைகளையும் நுகர்வோர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ‘ஓஎன்டிசி’ (Open Network for Digital Commerce) கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ‘அமேசான்’, ‘ஃபிளிப்கார்ட்’ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அந்தவகையில் இனி இந்திய சில்லரை வணிகத் துறை என்பது பலசரக்குக் கடைகளும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஆன்லைன் வர்த்தகமும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதாக இருக்கும்.
> இது, சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்